Published : 25 Apr 2021 06:10 AM
Last Updated : 25 Apr 2021 06:10 AM

கரோனாவால் மாற்று தொழிலுக்கு செல்லும் சிறு, குறு வியாபாரிகள், தொழிலாளர்கள்: அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை

தமிழகத்தில் கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் சிறு, குறு வியாபாரிகள் முதல் கூலித்தொழிலாளர்கள் வரை வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வாழ் வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள மாற்றுத்தொழிலை தேடி செல்லும் நிலை மீண்டும் உருவாகியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடந்த ஆண்டு கரோனா பரவல் தொடங்கியபோது லட்சக்கணக்கான தொழிலாளர் கள், சிறு, குறு வியாபாரிகள் வேலை வாய்ப்பை இழந்து வறுமையின் பிடியில் சிக்கினர். அவர்களின் துயர் துடைக்க அரசு சார்பில் குறிப்பிட்ட தொகை நிவாரணத்தொகையாக வழங்கப் பட்டது.

இந்த தொகை ஒரு குடும்பத்தின் தேவைக்கு போதுமானதாக இல்லை என்பதால் பல தொழிலாளர்கள் தங்களது வழக்கமான பணியில் இருந்து விலகி மாற்றுத்தொழிலையும், கிடைத்த வேலைகளையும் செய்ய தொடங்கினர்.

அதன்பிறகு கரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கிய பிறகு அனைவரும் ஏற்கெனவே பார்த்து வந்த தொழிலுக்கு கொஞ்சம்,கொஞ்சமாக திரும்பி பெரு மூச்சுவிட்டனர்.

பொதுமக்களின் இந்த மகிழ்ச்சிநீண்ட நாட்களுக்கு நிலைக்க வில்லை. தமிழகத்தில் தற்போது கரோனா 2-வது அலை மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருவதால் வியாபாரிகளும், தொழிலாளர் களும் வேலை வாய்ப்பை 2-வது முறையாக இழந்து வருகின்றனர்.

இதனால், குடும்ப தேவைக்காக பலர் மாற்றுத்தொழிலை தேடி யும், கிடைத்த வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், வேலூர் மாவட்டம் ரங்காபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணி (31) என்பவர், கரோனா தொற்று காரண மாக வருவாய் குறைந்ததால் தனது ஆட்டோவையே சிறு கடையாக மாற்றி முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட கரோனா தடுப்பு உபகரணங்களை விற்பனை செய்யும் சிறு வியாபாரியாக உரு வெடுத்துள்ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ஆட்டோ ஓட்டுநர் மணி கூறும்போது, ‘‘கடந்த 10 ஆண்டுகளாக வேலூர் மாநகர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறேன். சமீபத்தில் வங்கி மூலம் கடன் பெற்று புதிய ஆட்டோ ஒன்றை வாங்கினேன். மாதத் தவணையாக ரூ.8 ஆயிரம் கட்ட வேண்டும். இத்தொழிலை நம்பியே வங்கியில் கடன் வாங்கினேன்.

ஆனால், கரோனா பொது முடக்கத்தால் கடந்த ஆண்டு வாங்கிய கடனுக்கு முறையாக தவணைக்கட்ட முடியாமல் போனது. வங்கியில் 2 மாதங்கள் அவகாசம் வழங்கினாலும், அதற் கான வட்டியை அதிகரித்து விட்டனர்.

கடந்த முறை பொது முடக்கம் 8 மாதங்களுக்கு மேல் நீடித் ததால் குடும்ப செலவுக்கும், வங்கி கடன் தொகைக்கும் பணம் தேவைப்பட்டதால் மாற்றுத் தொழில் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், எனது ஆட்டோவையே சிறு கடையாக மாற்றி அதில் முகக்கவசம் விற்பனை செய்ய தொடங்கினேன். இது ஓரளவுக்கு கை கொடுத்தது. அதன்பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மீண்டும் ஆட்டோ ஓட்டினேன். தற்போது, கரோனா 2-வது அலை அதிகரித்து வருவதால் வேலூர் மாவட்டத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ளன.

மேலும், கரோனா அச்சத்தால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை, தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒருபுறம், ஆட்டோவில் 2 நபர்களுக்கு மேல் ஏற்றக்கூடாது என்ற நிபந்தனை, போக்குவரத்து காவல் துறையினரின் கெடுபிடி மற்றொரு புறம் என்ற பல்வேறு காரணங்களால் ஆட்டோ தொழிலை நம்பி பயன் இல்லை என்பதால் மீண்டும் முகக்கவசம், சானிடைசர் போன்ற கரோனா தடுப்பு உபகரணங்களை விற் பனை செய்ய முடிவு செய்து இத்தொழிலில் மீண்டும் இறங்கி விட்டேன். ஒரு முகக்கவசம் விற்றால் 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.

என்னை போல நிறைய ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் மாற்றுத்தொழிலை தேடி சென்று விட்டனர். சிலர் கட்டிட வேலைக் கும், சுமை தூக்கும் கூலித்தொழில் கூட செய்ய தொடங்கி விட்டனர். எங்களை போன்ற சிறு தொழில் செய்வோர்களுக்கு அரசு சார்பில் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சில தளர்வுகளை அரசு அறிவிக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x