Published : 24 Apr 2021 14:00 pm

Updated : 24 Apr 2021 14:00 pm

 

Published : 24 Apr 2021 02:00 PM
Last Updated : 24 Apr 2021 02:00 PM

ஒரு தேசம் ஒரு ரேஷன் கார்டு, ஒரு தேசம் ஒரு வரி; கோவிட் தடுப்பூசிக்கு மட்டும் ஒரு தேசம் மூன்று விலைகளா?- சு.வெங்கடேசன் கேள்வி 

one-nation-one-ration-card-one-nation-one-election-one-nation-one-tax-only-one-nation-three-prices-for-the-vaccine-govt-su-venkateasan

சென்னை

''மத்திய மாநில அரசுகள் போடும் மறைமுக வரிகள் மூலம் இந்த நாட்டின் மொத்த வருவாயில் 66%-ஐச் செலுத்துகிற எளிய மக்கள் இதைவிட நன்றாகக் கவனிக்கப்படுவதற்குத் தகுதி பெற்றவர்கள். அவர்களைக் காக்கின்ற பணியில் அரசு முதல் கடமையாகத் தடுப்பூசியை இலவசமாக அளிக்க வேண்டும்'' என மார்க்சிஸ்ட் எம்.பி., சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான ஹர்ஷவர்தனுக்கு மார்க்சிஸ்ட் எம்.பி., சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதம்:


“மொத்த தேசமும் அதிர்ந்து போயுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா அறிவித்துள்ள தடுப்பூசி விலைகளைப் பார்த்துதான்.

இரண்டாவது கோவிட் அலை நாடு முழுக்க வீசுகிறது. தேசத்தின் தலைநகரமான புது டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் நெஞ்சைப் பிழிகின்றன. நாடு முழுமையுமுள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு அபாயகரமான அளவிற்கு வீழ்ந்துள்ளது. சென்னை மருத்துவமனைகளிலும் இப்பிரச்சினை எழுந்துள்ளதாகச் செய்திகள் உள்ளன.

டெல்லி உயர் நீதிமன்றம், "மனித உயிர்கள் முக்கியமில்லையா? பிச்சை எடுங்கள்... கடன் வாங்குங்கள்... திருடக் கூட செய்யுங்கள்... இது தேசத்தின் அவசர நிலைக் காலம்" என்று மத்திய அரசைப் பார்த்துக் கூறியிருக்கிறது. பெரும் கார்ப்பரேட்டுகள் மீது வரி போடு என்றும் கனம் நீதிபதிகள் சேர்த்துச் சொல்லியிருக்கலாம்.

நேற்று இந்தியாவில் புதிய தொற்றுகள் 3,32,348. மரணங்கள் 2,247. உலகிலேயே மிக அதிகமான தொற்றுகளைப் பதிவு செய்துள்ள தேசமாக இந்தியா உருவெடுத்துள்ளது. மாடல் மாநிலம் எனப் "போற்றப்பட்ட" குஜராத் கதைகள் கண்களில் நீரை வரவழைக்கின்றன. சூரத் நகரில் உள்ள மூன்று அடக்க தலங்களில் தினமும் 300 பிணங்கள் சராசரியாகக் குவிகின்றன. 6 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை அடக்கத்திற்காக அப்பிணங்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றன. இறந்த பின்னர் நாகரிகமான அடக்கம் கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

நேற்று தமிழகத்தில் 12,652 புதிய தொற்றுகள், 59 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலைமை "கட்டுக்குள் இல்லை" என அரசு தெரிவித்ததென்ற செய்தி பெரும் பதற்றத்தையும், நடுக்கத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. வலுவான தலையீட்டின் வாயிலாக மக்களுக்கு நம்பிக்கையூட்டும் பெரும் கடமை அரசின் முன்பு உள்ளது.

ஆனால் "கோவிஷீல்டு" விலைகள் குறித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் அறிவிப்பு இதற்கு எதிர்மாறான விளைவை உருவாக்கியிருக்கிறது. கோவிஷீல்டு தடுப்பூசிதான் இந்தியாவில் 95%க்கும் அதிகமாகப் போடப்பட்டுள்ளது. தற்போது பாரபட்சமான விலை அமைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுகளுக்கு ரூ.400, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என மூன்று வகையான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

உங்கள் அரசாங்கம் "ஒரு தேசம்; ஒரு ரேஷன் கார்டு", "ஒரு தேசம்; ஒரு தேர்தல்", "ஒரு தேசம்; ஒரு வரி", "ஒரு தேசம்; ஒரு சந்தை" எனப் பேசுகிறது. அவையெல்லாம் மக்களுக்கும் தேசத்திற்கும் எதிரானவை. ஆனால், கோவிட் தடுப்பூசிக்கு "ஒரு தேசம்; மூன்று விலைகள்" என்பதை தேசமே அச்சத்தில் உறைந்துள்ள நேரத்தில் கொண்டுவருகிறது. இது ஏழைகளுக்கு, மத்திய தர மக்களுக்குப் பெரும் அடி. அவர்களைச் சந்தையின் கருணைக்கு விட்டுவிட்டு அரசாங்கம் ஒதுங்கிக் கொண்டுள்ளது.

நான் உலகம் முழுவதுமுள்ள ஏன் வளர்ந்த நாடுகளின் பொருளாதார நிபுணர்கள் மத்தியிலும் எழுந்துள்ள மாற்று சிந்தனையை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். அவையெல்லாம் உலகமய காலத்தில் "பொருளாதாரத்தில் இருந்து அரசு விலகுதல்" பற்றி நிறையப் பேசியவை. உலகின் புகழ்பெற்ற, லண்டனில் இருந்து வெளிவரும் "ஃபைனான்சியல் டைம்ஸ்" ஏப்ரல் 3 அன்று எழுதிய தலையங்கத்தின் வார்த்தைகள் இவை...

"கடந்த நாற்பது ஆண்டுகள் நாம் நடைமுறைப்படுத்தும் கொள்கை வழியை புரட்சிகரமான சீர்திருத்தங்கள் மூலம் மாற்ற வேண்டியுள்ளது. இப்பணி நம் மேஜைக்கு வர வேண்டியுள்ளது. அரசாங்கங்கள் பொருளாதாரத்தில் செயலூக்கம் கொண்ட தலையீடுகளைச் செய்ய வேண்டும். அவை பொதுச் சேவைகளை முதலீடுகளாகக் கருத வேண்டுமேயொழிய சுமைகளாக எண்ணக் கூடாது.

உழைப்பாளர் சந்தை பாதுகாப்பற்ற உணர்வுக்கு ஆளாக விடக் கூடாது. வருமான மறு பங்கீடு மீண்டும் நமது நிகழ்ச்சி நிரலில் இடம் பெற வேண்டும். இவ்வளவு காலம் அசூயையுடன் பார்க்கப்பட்ட அடிப்படை வருமானத்திற்கான உத்தரவாதம், செல்வ வரிகள் ஆகியன கலந்த பொருளாதாரக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்".

அவர்கள் அங்கே "மேலும் முனைப்பான தலையீட்டை" அரசுகள் செய்ய வேண்டுமென்று பேசும்போது நீங்கள் மக்களைச் சந்தையின் கைகளில் விட்டு விடுகிற முடிவை எடுத்துள்ளீர்கள். இந்த முடிவுக்கு எந்த தர்க்கமும் கிடையாது. நியாயமும் கிடையாது. பேரிடர் காலத்தில் சமுகப் பொறுப்புகளில் இருந்து அரசாங்கம் கழன்று கொள்வது மிக மிகக் கொடூரமானது.

முதலாவதாக, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் வெவ்வேறு விலைகளை அறிவித்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இது அரசியல் சாசனப்படி செல்லத்தக்கதா என்ற கேள்வி கூட எழுகிறது. இந்திய நாடு "மாநிலங்களின் ஒன்றியம்" எனும்போது எப்படி இரு வேறுபட்ட விலைகளை மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் நிர்ணயிக்க முடியும்?

இரண்டாவதாக, தற்போது அரசாங்கம் 18 வயதுக்கு மேற்பட்டோரும் தடுப்பூசி போடலாம் என்று கதவுகளைத் திறந்துள்ளது. ஆகவே, தடுப்பூசிகளுக்கான கிராக்கி கோடுகள் இன்னும் சில நாட்களில் செங்குத்தாக உயரப் போகிறது. இந்நிலையில் "அளிப்புச் சங்கிலியை" அரசு முறையாகக் கண்காணிப்பதும், மாநிலங்கள் மற்றும் பகுதிகள் மத்தியில் ஓர் சமத்துவச் சூழல் உருவாவதையும் உறுதி செய்ய வேண்டும்.

தடுப்பூசி சந்தையைத் தனியாருக்குத் திறந்து விடுவது அளிப்பு சங்கிலியைப் பாதிக்கும். இதனால் இன்னல்களுக்கு ஆளாகப் போகிறவர்கள் கடைசியில் இந்த தேசத்தின் எளிய மக்கள்தான். ஒவ்வொரு மாநிலமும், பகுதியும் சந்தையில் போய் நெருக்குதல் தரும் போது மிகக் குழப்பமான நிலைமை உருவாகப் போகிறது.

மூன்றாவதாக, மாநில அரசாங்கங்கள் ஏற்கெனவே கடுமையான நிதி நெருக்கடியில், கடன் சுமையில் தத்தளிக்கின்றன. இந்த புதிய விலைக் கொள்கை இன்னும் அதிகமான சுமையை மாநிலங்களின் முதுகுகளில் ஏற்றுவதாக உள்ளது. ஜி.எஸ்.டி முறைமை அமலுக்கு வந்த பிறகு மாநில அரசாங்கங்கள் தன்னிடம் இருந்த வரி போடுகிற அதிகாரங்களையும் பெருமளவிற்கு இழந்துவிட்டன. ஆகவே இச்சுமையை அவர்கள் சுமப்பது மிகக் கடினம்.

நான்காவதாக, தனியார் அனுமதி என்பது இந்த நடவடிக்கைகள் அனைத்தையுமே வியாபாரமாக, லாபநோக்கு கொண்டதாக மாற்றப் போகிறது. தனியார் மருத்துவமனைகள் தங்களின் பணபலத்தைச் சந்தையில் காண்பிப்பார்கள். அது அரசு மருத்துவ சேவைகளை நம்பியிருக்கிற சாமானிய மக்களுக்குத் தடுப்பூசி கிடைப்பதைப் பாதிக்கும். ஏற்கெனவே கார்ப்பரேட் மருத்துவமனைகள் கோவிட் நோயாளிகள் மீது கட்டணக் கொள்ளையைக் கட்டவிழ்த்துவிட்ட அனுபவம் நமக்கு உண்டு. இப்போது தடுப்பூசியிலும் அதே அனுபவம் திரும்பி வந்துவிடக் கூடாது.

ஐந்தாவதாக, மத்திய அரசு தடுப்பூசிகளுக்கான செலவினம் முழுமையும் ஏற்க வேண்டும். அதற்கான வருவாய் திரட்டல்களையும் செய்யலாம். கார்ப்பரேட் வரிகளில் உயர்வு, வாரிசுரிமை வரி அறிமுகம், செல்வ வரி, சூப்பர் ரிச் வரிகள் போன்ற ஆலோசனைகளை இந்த தேசத்தின் அறிவார்ந்த பொருளாதார நிபுணர்கள் முன்வைத்துள்ளனர். ஆனால், உங்கள் அரசாங்கம் இருப்பவர்கள் மீது வரி போட்டு இல்லாதவர் நலனைக் காப்பாற்றுவது பற்றி யோசிக்கவேயில்லை.

மத்திய மாநில அரசுகள் போடும் மறைமுக வரிகள் மூலம் இந்த நாட்டின் மொத்த வருவாயில் 66%-ஐச் செலுத்துகிற எளிய மக்கள் இதை விட நன்றாகக் கவனிக்கப்படுவதற்கு தகுதி பெற்றவர்கள் என்பதை உங்களுக்கு அழுத்தமாகச் சுட்டிக் காட்ட விழைகிறேன். ஆகவே மத்திய அரசாங்கம் கீழ்க்காணும் நடவடிக்கைகளை எந்தவொரு கால தாமதமுமின்றி விரைவில் மேற்கொள்ள வேண்டுகிறேன்.

* புதிய விலைக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். தடுப்பூசிக்கு சந்தையைத் திறந்துவிடுவது கூடாது.

* தடுப்பூசி அளிப்பிற்காக, செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோ, நீலகிரி பாஸ்டியர் ஆய்வகம், சென்னையின் பி.சி.ஜி ஆய்வகம், சிம்லாவின் மத்திய மருந்து ஆராய்ச்சி மையம் போன்ற அரசு மருத்துவ நிறுவனங்கள் மூலம் உற்பத்தி அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

* ஏற்றுமதி முறையாக நெறிப்படுத்தப்பட்டு உள்நாட்டுத் தேவை சற்றும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* "கட்டாய உரிமம்" வழங்கப்படுவதை உறுதி செய்து எல்லோருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

* அமெரிக்க ஐக்கிய நாடுகள், மருத்துவ துணைப்பொருட்கள் மீது விதித்துள்ள தடையை நீக்க மத்திய அரசு முயல வேண்டும்.

* மத்திய அரசே தடுப்பூசிக்கான முழுச் செலவை ஏற்பதோடு எல்லோருக்கும் கட்டணமில்லாத் தடுப்பூசியை உறுதி செய்ய வேண்டும்.

"ஊரடங்கு" என்பது தீர்வுகளுக்கான கடைசி தெரிவாக இருக்க வேண்டுமென்று நமது பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். எனது வேண்டுகோள் இதுதான். தடுப்பூசி என்பது தீர்வுக்கான முதல் தெரிவு. அதற்கான கவனத்தை அரசாங்கம் செலுத்த வேண்டாமா?

மத்திய அரசு இதற்கான நேர்மறை நடவடிக்கைகளை மேற் கொள்ளுமா? காலத்தே செய்யுமா? மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்”.

இவ்வாறு கடிதத்தில் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.


தவறவிடாதீர்!

One Nation One Ration CardOne Nation One ElectionOne Nation One TaxOnly one Nation Three Prices for the Vaccine?GovtSU.Venkateasanஒரு தேசம் ஒரு ரேசன் கார்டுஒரு தேசம் ஒரு தேர்தல்ஒரு தேசம் ஒரு வரிகோவிட் தடுப்பூசிக்கு மட்டும் ஒரு தேசம்; மூன்று விலைகளா?சு.வெங்கடேசன் கேள்வி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x