Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM

ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் பரிசல் இயக்க தடை

கோப்புப்படம்

தருமபுரி

கரோனா பரவலை கட்டுப்படுத்த, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வரவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கார்த்திகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த 24.03.2021-ம் தேதி முதல் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, தனி மனித இடைவெளியை பின்பற்றச் செய்வது,கட்டாயம் முகக்கவசம்அணியச் செய்வது உள்ளிட்ட நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநில பேரிடர் மேலாண் சட்டம் 2005-ன் படி தமிழகம் முழுக்க ஏற்கெனவே பொது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. அதில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகள் மற்றும் சில புதிய கட்டுப்பாடுகளுடன் 30.04.2021 நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பொது நிகழ்ச்சிகள், விழாக்கள், கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளில் மக்கள் முகக்கவசம் அணிவதைத் தவிர்ப்பதாலும், பணியிடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறை களை முறையாகப் பின்பற்றத் தவறுவதாலும் அண்மைக் காலமாக மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது தீவிரமாக கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை தர தடை விதிக்கப்படுகிறது. உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வரவும், அருவியில் குளிக்கவும் அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது. அதேபோல, பரிசல் இயக்கத்துக்கும் இன்று (20-ம் தேதி) முதல் தடை விதிக்கப்படுகிறது.

ஊரடங்கை அரசு அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் கூட, மக்களின் ஒத்துழைப்பு இல்லையெனில் இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. எனவே, பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் கரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதை தவிர்த்து, தருமபுரி மாவட்டத்தில் மேலும் கரோனா தொற்று பரவுவதை தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

அணை பூங்காவிற்குள் செல்ல தடை

கிருஷ்ணகிரி அணைக்குள் பூங்காவிற்குள்செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழக அரசு உத்தரவுப்படி, பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடும், அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, படகு இல்லம், கிருஷ்ணகிரி அணை பொழுது போக்கு பூங்கா, கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் உள்ளிட்டவை இன்று (20-ம் தேதி) முதல் மறுஉத்தரவு வரும் வரை செயல்படாது.

மேலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை தவறாமல் பின்பற்ற வேண்டும். வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கைகழுவியும். சமூக இடைவெளியை கடைபிடித்து, தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து கரோனா நோய் பரவுவதை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x