Published : 29 Mar 2021 08:12 PM
Last Updated : 29 Mar 2021 08:12 PM

பாவங்கள் செய்த முதல்வர் பழனிசாமியை இயற்கையும் கடவுளும் ஏன் மக்களும் காப்பாற்ற மாட்டார்கள்: ராணிப்பேட்டையில் ஸ்டாலின் பேச்சு

வேலூர் அடுத்துள்ள ஊசூரில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

வேலூர்/ராணிப்பேட்டை

பாவங்களை செய்த பழனிசாமியை இயற்கையும், கடவுளும் ஏன் மக்களும் காப்பாற்ற மாட்டார்கள். அதை ஏப்ரல் 6-ஆம் தேதி அவர் தெரிந்துகொள்வார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக துரைமுருகன் (காட்பாடி), ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), கார்த்திகேயன் (வேலூர்), அமலு விஜயன் (குடியாத்தம்), சீதராமன் (கே.வி.குப்பம்) ஆகியோரை ஆதரித்து ஊசூர் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்-29)தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘‘இந்தத் தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் கூட ஜெயிக்கக்கூடாது. பாஜக ஜெயிக்கப்போவதுமில்லை. அவர்கள் குட்டிக்கரணம் போட்டாலும் நுழைய முடியாது.

முதல்வர் பழனிசாமி, ஊர் ஊராகச் சென்று பொய் பிரச்சாரம் செய்கிறார். அப்பட்டமாக, அபாண்டமாக பொய் சொல்கிறார். நான் படிப்படியாக வளர்ந்து வந்ததாக சொல்கிறார். அவர் ஊர்ந்து வந்தார், தவழ்ந்து வந்தார், தவ்வித்தவ்வி வந்தார்.

ஆனால், நான் உழைத்து வந்தேன் என்பதை திமுக தொண்டர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். கருணாநிதி 13 வயதில் பள்ளிக்கூடத்தில் படித்திருந்த போது அரைக்கால் சட்டை போட்ட மாணவராக,சக நண்பர்களை அழைத்துக்கொண்டு இந்தி திணிப்பை எதிர்க்க திருவாரூர் தெற்கு வீதியில் ஊர்வலம் நடத்தினார்.

அதேபோல், நானும் 14 வயதில் கோபாலபுரம் இளைஞர் திமுகவை உருவாக்கி, பிறகு பகுதி பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டு மாவட்ட கழக பிரதிநியாக, பொதுக்குழு,செயற்குழு உறுப்பினராக படிப்படியாக உயர்ந்து இளைஞரணி செயலாளர், துணை பொதுச் செயலாளர், பொருளாளாராக, செயல் தலைவராகவும், கருணாநிதி மறைவுக்குப் பிறகு தலைவராகவும் பெறுப்பேற்றுக் கொண்டேன்.

பதவியில் சட்டப்பேரவை உறுப்பினராக, மேயராக, உள்ளாட்சி துறை அமைச்சராக, துணை முதல்வராக, எதிர்கட்சி தலைவராக நாளைக்கு...? இந்தப் பதவிகளை எல்லாம் பதவிகளாக நினைக்கவில்லை. உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்பது ஸடாலின் என்று கருணாநிதியால் பாராட்டு பெற்றேன். எனவே, அதைவிட வேறு பதவி எதுவும் இல்லை.

இன்று நம்மைப் பார்த்து சட்டம் ஒழுங்கை கெடுத்தது திமுக என்று அதிமுகவினர் சொல்கின்றனர். அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கதை தெரியும் எல்லாருக்கும். தினமும் சங்கிலி பறிப்பு என பத்திரிகைகளில் வெளிவந்தது. காவல் துறையில் உயர் பொறுப்பில் இருக்கும் பெண் எஸ்பியிடம் பலாத்காரம் செய்ய முயன்றவர் சிறப்பு டிஜிபி.

ஒரு உறுதியை உங்கள் மூலமாக நாட்டுக்கு தெரிவிப்பது என்னவென்றால் விரைவில் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இரும்புக்கரம் கொண்டு காக்கப்படும். காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்குவேன்.

கூட்டுறவு கடன் தள்ளுபடி ரூ.12 ஆயிரம் கோடி தள்ளுபடி என கூறிவிட்டு 5 ஆயிரம் கோடியை மட்டும் ஒதுக்கியுள்ளனர். மீதமுள்ள 7 ஆயிரம் கோடியை நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தள்ளுபடி செய்வோம்.

தமிழகத்தில் காலியாக உள்ள 3.50 லட்சம் காலிப் பணியிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் நியமனம் செய்யப்படுவார்கள். பொதுத்துறை நிறுவனங்ளில்75 சதவீதம் வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றப்படும். திமுக ஆட்சிக்கு வந்ததும் கரோனா நிவாரணத் தொகை ரூ.4 ஆயிரம் வழங்குவோம். அதையும் கருணாநிதி பிறந்த ஜூன் 3-ஆம் தேதி வழங்கப்படும். கரோனா சூழல் முடியும் வரை சொத்து வரி வசூலிக்கப்படாது. மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படும்’’ என்று பேசினார்.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஆர்.காந்தி (ராணிப்பேட்டை), ஈஸ்வரப்பன் (ஆற்காடு), முனிரத்தினம் (சோளிங்கர்), கவுதம் சன்னா (அரக்கோணம்) தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ராணிப்பேட்டையில் இன்று (மார்ச் 29) மாலை 7 மணியளவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘முல்வர் பழனிசாமி இப்போது வாய்க்கு வந்தபடி உளறுகிறார். இயற்கையும் கடவுளும் எனக்கு துணையாக இருப்பதாக பேசி இருக்கிறார். அவர் தனக்குத்தானே ஆறுதல் செல்லிக் கொள்கிறார்.

அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இயற்கை பேரிடர்தான் அதிகம் நடக்கிறது என்பது பல சாட்சிகள் இருக்கிறது. உயிர்களை காவு வாங்கிய சுனாமி, வாழ்வாதாரத்தை பாதித்த தானே புயல், வெள்ளத்தில் மிதந்த சென்னையை மீட்க இரண்டு மாதம் ஆனது. ஒக்கி புயல், கஜா புயல், நீலகிரி நலச்சரிவு, நிவர் புயல், புரெவி புயல் என சொல்லிக்கொண்டே செல்லலாம்.

பேரிடர் காலங்களில் முதல்வர் மக்களை சந்திக்கணும். அதையாவது செய்தாரா? என்றால் இல்லை. அமைச்சர் ஒருவர் சுவர் எகிறி குதித்த கதையும் இருக்கிறது. இதெல்லாம் மக்களுக்கு தெரியாது என்று நினைத்துக் கொண்டு இயற்கையை இறைவனையும் கூப்பிடுகிறார்.

கடவுள் துணை இருந்தால் சாமி சிலைகளை கடத்தியவர்களை காப்பாற்றிய ஆட்சி பழனிசாமி ஆட்சி. சிலை கடத்தலை தடுக்க அமைக்கப்பட்ட காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் என்பவருக்கு என்னென்ன துன்பங்கள் கொடுத்தார்கள். இதற்கு கடவுள் துணை இருப்பாரா? இதுதான் பழனிசாமியின் லட்சணம்.

தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்ற ஆட்சி இந்த ஆட்சி. சாத்தான் குளத்தில் அப்பா, மகனை அடித்து கொன்ற பாவிகளை கடவுள் காப்பாற்றுவாரா? நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட 14 பேர் இறந்தனர்.

இவ்வளவு பாவங்கள் செய்தவர்களை கடவுள் காப்பாற்றுவாரா? அந்த யோக்கியதை பழனிசாமிக்கு உண்டா? காலைப் பிடித்து பதவி வாங்கி, அந்த காலை வாரிய துரோகத்துக்கு கடவுள் காப்பாற்றுவாரா? இயற்கையும், கடவுளும், மக்களும் காப்பாற்ற மாட்டார்கள். இந்த உண்மையை பழனிசாமி வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நன்றாக தெரிந்து கொள்ளப் போகிறார்’’ என்று பேசினார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x