Last Updated : 28 Mar, 2021 03:17 AM

 

Published : 28 Mar 2021 03:17 AM
Last Updated : 28 Mar 2021 03:17 AM

தமிழக பாஜக வேட்பாளர்களுக்காக களமிறங்கிய வெளி மாநில பொறுப்பாளர்கள்

திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூர் ஒன்றியத்தில் வாக்காளர் ஒருவரிடம் பாஜக வெளிமாநில நிர்வாகி சக்தி காந்த் அப்பகுதியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் தேர்தல் பணி ஆந்திர, கர்நாடக, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநில பாஜக நிர்வாகிகள் மேற்பார்வையில் நடைபெறுகிறது.

பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் தொகுதிக்கு 5 பேர் வீதம் 100 பேர் தேர்தல் பணியில் களமிறக்கப்பட்டுள்ளனனர். இது தவிர பாஜக மேலிட பொறுப்பாளர்களுக்கு உதவ 50 வெளிமாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொகுதிக்கு 5 பேர் என மும்முரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

அந்தந்த தொகுதிகளில் உள்ள கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை அழைத்து, அதிமுக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக போன்ற கட்சிகளுக்கு இருக்கும் வாக்குகளை அறிய ஒரு குழு அமைத்துள்ளனர்.

இந்தக் குழுவினர் தாங்கள் கணித்தபடியே வாக்குகள் பதிவாகுமா என்பதை உறுதி செய்ய வாக்காளரோடு தொடர்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இக்குழுவின் அறிக்கைக்கேற்ப கிராமம் வாரியாக கூட்டணிக் கட்சியினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு வருகிறது. அந்தக் குழுவினர் தரும் தகவலின்படி பிரச்சாரக் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதுதவிர்த்து தொகுதியில் நிலவும் பிரச்சினைகளைச் சேகரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தரும் தகவலின் பேரில் வேட்பாளர் வாக்கு சேகரிக்கும் போது வாக்குறுதிகளைத் தர வேண்டும். அதை இந்தக் குழு கண்காணித்து உறுதிப்படுத்தும்.

இந்தப் பணிகளை வகுத்துக் கொடுத்து, அவற்றை கண்காணித்து செயல்படுத்துவது அனைத்தும் பாஜகவின் வெளிமாநில நிர்வாகிகள் மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தனித் தொகுதியில் போட்டியிடும் தடா பெரியசாமிக்கு தேர்தல் பணியை 5 பேர் கொண்ட குழு செயல்படுத்திக் கொண்டிருந்தது.

நாம் தொகுதி விசிட் சென்ற போது, மங்களூர் ஒன்றியத்தில் சக்திகாந்த் என்ற வெளி மாநில பொறுப்பாளர் குழுவை அமைத்து, குழு கொடுத்த அறிக்கை அடிப்படையில் வாக்காளர்களை சந்தித்து என்ன பிரச்சினை என்று கேட்டுக் கொண்டிருந்தார். கூடவே, ‘பாஜகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்’ என்று அக்கிராம மக்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.

உடன் வந்த அப்பகுதி பாஜக பொறுப்பாளர் கதிர்வேலுவிடம் பேசினோம். “இவர்கள் மூலம் புதிய அனுபவம் கிடைத்துள்ளது. இதே மாதிரி வாக்கு சேகரித்தால் வெற்றி நிச்சயம்” என்று நம்பிக்கையோடு பேசினார்.

”இது எங்களுக்கு புதிதல்ல! ஏற்கெனவே இடைத்தேர்தல்களில் எங்கள் கிளை அமைப்புகளைக் கொண்டு இது போன்ற செயல்படுத்தியிருக்கிறோம்.அதையே தான் இவர்களும் செய்கின்றனர்” என்று உடன் இருந்த அதிமுக கிளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x