Published : 14 Mar 2021 03:14 AM
Last Updated : 14 Mar 2021 03:14 AM

உயர் வளிமண்டல ஆய்வுக்காக இஸ்ரோவின் ‘சவுண்டிங் ராக்கெட்’: வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

உயர் வளிமண்டல பரப்பில் நிலவும் காற்று மற்றும் பிளாஸ்மா அயனிகள் தொடர்பான ஆய்வுக்காக இஸ்ரோ சார்பில் ‘சவுண்டிங் ராக்கெட்’ வெற்றிகரமாக ஏவப் பட்டது.

ககன்யான், சந்திரயான்-3 உட்பட பல்வேறு ஆய்வுத் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. வணிக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கைக் கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டு வரு கின்றன.

இதற்கிடையே, சிறிய ரகஆய்வு சாதனங்களை புவியின்தாழ்ந்த சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தவும், வளிமண்டலம் தொடர்பான விண்வெளி ஆய்வுக்கும் சவுண்டிங் ராக்கெட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இஸ்ரோவிடம் ஆர்எச்-200, ஆர்எச்-300, ஆர்எச்-560 என 3 விதமான சவுண்டிங் ராக்கெட்கள் உள்ளன. இது 2 நிலைகளைக் கொண்டது. இவற்றின் மூலம் 100 கிலோ வரையிலான ஆய்வுக் கருவிகளை அதிகபட்சம் 475 கி.மீ. தூரம் கொண்ட புவியின் சுற்றுப் பாதையில் நிலைநிறுத்த முடியும். அதன்படி, கடந்த 1965-ம்ஆண்டு முதல் இதுவரை இஸ்ரோசார்பில் 100-க்கும் மேற்பட்ட சவுண்டிங் ராக்கெட்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

ஆர்.எச்.560 ரகம் ராக்கெட்

அந்த வரிசையில், ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ சார்பில் ஆர்எச்-560 ரக சவுண்டிங் ராக்கெட் கடந்த 12-ம் தேதி இரவு வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

புவி பரப்புக்கு மேல் உள்ள உயர் வளிமண்டலத்தில் வீசக்கூடிய காற்று, பிளாஸ்மா அயனிகளின் செயல்பாடு ஆகியவற்றில் நிலவும் மாற்றங்கள் தொடர்பான ஆய்வுக்காக இந்த ராக்கெட் அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x