Last Updated : 18 Mar, 2014 12:00 AM

 

Published : 18 Mar 2014 12:00 AM
Last Updated : 18 Mar 2014 12:00 AM

பா.ஜ.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகல்?- ஜாதிக் கட்சிகள் கூட்டணி மூலம் தேர்தலை சந்திக்க திட்டம்

கூட்டணியில் இருந்து வெளியேறும் நோக்கத்துடன் பாமக பேசி வருவதால், பாஜக-வினர் எரிச்சல் அடைந்துள்ளனர். கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என ராமதாஸும் நீடிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸும் தெரிவிப்பதால் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை அதிமுக, திமுக தொடங்கிவிட்ட நிலையில் பாஜக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு இழுபறியே முடியவில்லை.

பாஜக கூட்டணியில் தேமுதிகவுக்கு 14, பாமகவுக்கு 8 தொகுதிகள் என முடிவாகிவிட்டது. ஆனால் ச்பெரும்புதூர், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பாமக கேட்கிறது.

இதற்கிடையில் சேலம் தொகுதியை தேமுதிக-வும் ஸ்ரீபெருபுதூரை பாஜக-வும் கேட்கின்றன. பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் புதுச்சேரியில் வேட்பாளரை அறிவித்துவிட்டது.

இதற்கிடையில், 8 தொகுதிகள் போதாது, 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளை தரவேண்டும். புதுச்சேரியில் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுவோம் என பாஜக-விடம் பாமக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கூட்டணியிலிருந்து வெளியேறும் நோக்கத்துடன் தொடர்ந்து பாமக பேசிவருவதாக பாஜக கருதுகிறது.

இதனால், கூட்டணி இறுதி வடிவம் பெறாமல் இழுபறி நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், பாமக தலைமையிலான சமூக ஜனநாயகக் கூட்டணியின் 11வது வேட்பாளாராக அன்புமணி தருமபுரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனால் எரிச்சல் அடைந்துள்ள பாஜக, தேமுதிகவை மட்டும் கூட்டணியில் வைத்துக்கொண்டு, பாமகவை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக பாமக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: பாஜக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே, பாமக சமூக ஜனநாயகக் கூட்டணி அமைத்து 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. இந்நிலையில், பாஜக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பாமக தொடங்கியது.

இதனால், சமூக ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஜாதி தலைவர்களில் சிலர், பாஜக கூட்டணி வேண்டாம் என ராமதாஸிடம் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, பாஜக கூட்டணியைவிட்டு வெளியேற முடிவு செய்தார் ராமதாஸ்.

ஆனால், அன்புமணி ராமதாஸ்தான் பாஜக கூட்டணியில் இருக்க வேண்டும் என ஒரே பிடிவாதமாக இருக்கிறார். அவரது நிர்பந்தப்படியே பாஜக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. நாங்கள் கேட்கும் தொகுதிகளை தர மறுத்தால், சமூக ஜனநாயகக் கூட்டணி மூலம் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x