Published : 28 Feb 2021 17:37 pm

Updated : 28 Feb 2021 18:10 pm

 

Published : 28 Feb 2021 05:37 PM
Last Updated : 28 Feb 2021 06:10 PM

கல்வியாளர்களின் கருத்துகளை கேட்காமல் புதிய கல்விக் கொள்கை அமல்: ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி குற்றச்சாட்டு

rahul-gandhi-slams-nep
படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

நாட்டிலுள்ள கல்வியாளர்கள், ஆசிரியர்களின் கருத்துகளைக் கேட்காமலேயே புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார்.

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, இன்று 2-வது நாளாக திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி பேசியதாவது:


புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்துகளை மத்திய அரசு கேட்கவில்லை. கல்விக்கு தொடர்பில்லாதவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

கல்வித்துறையில் மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிந்திருப்பது கல்வியை சீரழித்துவிடும். எல்லா தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும், கலந்துரையாடல் நடத்த வேண்டும். அதுதான் ஆரோக்கியமான ஜனநாயகமாக இருக்க முடியும். ஆனால் மத்திய அரசு அவ்வாறு செய்யவில்லை. யாருடைய கருத்தையும் கேட்கவில்லை. மற்றவர்களுடன் இணக்கமாக அன்பாக இருக்க வேண்டும் என்றுதான் அனைத்து மதங்களும் தெரிவிக்கின்றன.

நாட்டிலுள்ள அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உறுதி செய்வோம். மாநில பட்டியலில் கல்வியை கொண்டுவர வேண்டும் என்று கேட்கிறீர்கள். நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கல்வியை கொண்டு செல்ல வேண்டும் என்று நான் கருதுகிறேன். மத்திய பட்டியலில் கல்வி இருப்பது என்பது மோசமானது.

இந்தியா என்பது பல்வேறு மாநிலங்களின் ஒன்றிணைந்தது. ஆசிரியர்களால்தான் மாணவர்களின் அறிவும், திறனும் வளர்த்தெடுக்கப்படுகின்றன.

தொழில்நுட்பமும் அதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆசிரியர்களே கல்வியின் மையமாக இருக்கிறார்கள். அவர்களுக்கான அங்கீகாரமும், ஊதியமும் அளிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சுதந்திரம் அளித்தால்தான் புதிய சிந்தைகள், படைப்புகள் உருவாகும். அவர்களை அடக்கி ஆள நினைக்க கூடாது. பெண்களுக்கு அதிகாரமும், மதிப்பும் அளிக்காத சமுதாயம் முன்னேற முடியாது.

கல்வி, வேளாண்மை, சுகாதாரம் போன்றவற்றை வணிகமயமாக்கிவிட்டார்கள். அவ்வாறில்லாமல் ஏழைகள், பணக்காரர்கள் என்று அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க செய்ய வேண்டும். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்விக்கு மத்திய பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்க வேண்டும். கரோனா காலத்தில் ஒருசிலரின் லாபத்துக்காக மட்டும் மத்திய அரசு ரூ.1.50 லட்சம் கோடியை ஒதுக்கியிருந்ததை நினைவுபடுத்துகிறேன். அத்தொகையை கல்வி மேம்பாட்டுக்கு ஒதுக்கியிருக்கலாம்.

பெரிய அளவில் கனவுடன் நாங்கள் செயல்படுகிறோம். அதில் 80 சதவிகிதம் அளவுக்காவது வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. எதிரிகளை எதிர்த்து போராடுகிறோம். கடந்த 70 ஆண்டுகளுக்குமுன் ஆங்கிலேயர்களை இந்தியாவிலிருந்து கத்தியின்றி, ரத்தமின்றி வெளியேற்றியதுபோல் மோடியை மீண்டும் நாக்பூருக்கு திருப்பி அனுப்ப வேண்டும். அதற்கு அகிம்சை முறைகளையே நாங்கள் கையாள்வோம்.

தமிழகம் யாருக்காக வெற்றிநடைபோடுகிறது என்பது மக்களுக்கு தெரியும். 2 அல்லது 3 பேருக்காக மட்டுமே தமிழகம் வெற்றிநடைபோடுகிறது என்று ராகுல்காந்தி பேசினார்.

இதை தொடர்ந்து திருநெல்வேலியிலுள்ள பழமைவாய்ந்த அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் ராகுல்காந்தி சாமிதரிசனம் செய்தார். கோயிலில் காந்திமதியம்மன் சந்நிதிக்கு சென்ற ராகுல்காந்திக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு அளிக்கப்பட்ட்து.

தொடர்ந்து சுவாமி சந்நிதிக்கு சென்று தரிசனம் செய்தார். நெல்லையப்பர் கோயிலின் பாரம்பரியம், சிறப்புகள், கோயிலில் உள்ள சிற்பங்கள், இசைத்தூண்கள் குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்து வியப்படைந்தார். பின்னர் ரதவீதிகளில் காரில் சென்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது அவருக்கு திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே. சங்கரபாண்டியன் தலைமையில் கட்சியினர் வெள்ளிச் செங்கோல் கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தவறவிடாதீர்!ராகுல் காந்திகாங்கிரஸ்புதிய கல்விக் கொள்கைராகுல் பிரச்சாரம்ராகல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x