Published : 28 Feb 2021 04:49 PM
Last Updated : 28 Feb 2021 04:49 PM

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கட்டண விவகாரம்; அதிமுக அரசின் கபட நாடகம்: ஸ்டாலின் கண்டனம்

சென்னை

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அரசுக் கட்டணமே வசூலிக்கப்படும் என்று அதிமுக அரசு உறுதியளித்தது. ஆனால், அங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

2013-ம் ஆண்டு முதல் அரசு நிதியில் இயங்கி வருகிறது சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி. பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை தங்களுக்கு வசூலிக்க வலியுறுத்தி 58 நாட்களாக (பிப்ரவரி 4-ம் தேதி வரை) இந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். மாணவர்களின் தொடர் போராட டம் காரணமாக கடந்த ஜனவரி 29-ம் தேதி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதாரத் துறைக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனாலும், கல்விக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை.

தற்போது படிக்கும் 2,293 மாணவர்களின் கல்விக் கட்டணம் குறித்தும், எதிர்வரும் ஆண்டில் சேரவிருக்கும் மாணவர்களின் கட்டணம் குறித்தும் அரசின் அறிவிப்பில் தெளிவான விளக்கம் இல்லாததால், மாணவர்கள் மிகவும் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும், உயர் கல்வித் துறையிலிருந்து சுகாதாரத் துறைக்கு கல்லூரி மாற்றப்பட்டிருப்பது நிர்வாக மாற்றம் மட்டுமே என்பதால், கல்விக் கட்டணம் குறித்து அரசு தெளிவான தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் மாணவர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரிகளில் உள்ளதைப் போன்று குறைக்கப்பட்டிருப்பதாகவும், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கல்லூரிக்குத் திரும்புமாறும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி, எம்பிபிஎஸ் பாடப் பிரிவிற்கு ரூ.13,610, பிடிஎஸ் பாடப் பிரிவிற்கு ரூ.11,610, பட்ட மேற்படிப்புக்கு ரூ.30,000, பட்ட மேற்படிப்பு பட்டயப் பாடப் பிரிவிற்கு ரூ.20,000, பிஎஸ்சி (செவிலியர்) இயன்முறை மருத்துவம் மற்றும் செயல்முறை மருத்துவப் பாடப் பிரிவிற்கு ரூ.5 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மாணவர்கள் கடந்த 58 நாட்களாக நடத்தி வந்த தொடர் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

ஆனால், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மீண்டும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், அதிமுக அரசு இரட்டை வேடம் போடுவதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் இன்று முகநூலில் எழுதி வெளியிட்ட பதிவு:

''சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தினால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கட்டணமே வசூலிக்கப்படும் என உறுதியளித்த அதிமுக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டது.

அறிவிப்பது ஒன்று, நடைமுறையில் வேறொன்று எனச் செயல்படும் இந்த அரசின் ஆணவப் போக்கினால் மாணவர்களிடம் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனது அரசாணையையே மதிக்காத அதிமுக அரசுக்கு எதிராக மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரட்டை வேடம் போட்டு கபட நாடகம் ஆடும் அதிமுக அரசு, மாணவர்களை வஞ்சிக்காமல் அரசாணைப்படி கட்டணம் வசூலிக்க வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x