Published : 19 Nov 2015 08:35 AM
Last Updated : 19 Nov 2015 08:35 AM

ராமேசுவரத்தில் சீலா மீன்வரத்து தொடக்கம்

ராமேசுவரம் தீவு கடற்பகுதியில் சீலா மீன்களின் வரத்து தொடங்கி உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, கடந்த ஒரு வாரமாக பாம்பன் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறையினர் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடல் பகுதியில் சகஜ நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மீனவர்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குச் சென்றனர். நேற்று அவர்கள் ஏராளமான சீலா மீன்களுடன் கரைக்குத் திரும்பினர்.

இதுகுறித்து பாம்பன் விசைப்படகு மீனவர்கள் கூறியதாவது: ராமேசுவரம் தீவுப் பகுதிகளில் ஓலை போன்று நீளமாகவும், மெல்லியதாகவும் இருக்கக்கூடிய ஓலைச் சீலா, கட்டையாக உடல் முழுவதும் சாம்பல் நிறத்தில் இருக்கும் கட்டையஞ்சீலா, உருண்டை வடிவத்தில் இருக்கும் குழிச் சீலா, உடல் முழுவதும் சாம்பல் நிறத்திலும், வாலில் மட்டும் மஞ்சள் நிறத்தில் கரை ஓரங்களில் வாழக்கூடிய கரைச் சீலா, கொழுப்பு அதிகமாக உள்ள சாப்பிடுவதற்கு, சுவை அதிகம் கொண்ட நெய் சீலா, மற்றும் வெள்ளுராச் சீலா, லோப்புச் சீலா, நாய்க்குட்டி சீலா என எட்டு வகையான சீலா மீன்கள் காணப்படுகின்றன.

இதில் நெய் சீலா மீன்களை மட்டும், அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.400 வரையிலும் விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். மற்ற 7 விதமான சீலா மீன்கள் கருவாடாக அதிகளவில் பதப்படுத்தி, தமிழகம் மற்றும் கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x