Last Updated : 14 Feb, 2021 03:18 AM

 

Published : 14 Feb 2021 03:18 AM
Last Updated : 14 Feb 2021 03:18 AM

கடலூர் டேவிட் கோட்டையில் கையில் பேனாவைப் பிடித்தபடியே உயிர்நீத்த பெஞ்சமின் ராபின்ஸ்

கடலூர் புனித டேவிட் கோட்டை

இந்தியா உள்ளிட்ட கிழக்கத்திய நாடுக ளோடு வணிகம் செய்யும் நோக்குடன் தொடங்கப்பட்ட, ஆங்கிலக் கிழக் கிந்தியக் கம்பெனிக்கு 1600-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி முதலாம் எலிசபெத் மகாராணி அரச அனுமதிப் பட்டயத்தை வழங்கினார்.

அக்கம்பெனி 1608-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி இந்தியாவின் சூரத் துறைமுகத்தில் முதன் முதலில் காலடி வைத்தது. அதன்பிறகு 1611-ம் ஆண்டு ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தில் தனதுமுதல் தொழிற்கூடத்தையும், 1612-ம்ஆண்டு சூரத்தில் இரண்டாவது தொழிற்கூடத்தையும் அமைத்தது.

தொடர்ந்து சென்னை, பம்பாய், கொல்கத்தா எனப் பல இடங்களிலும் வணிகத் தளங்களையும், கோட்டைகளையும் அமைத்தது. 1647-ம் ஆண்டு வாக்கில் அக்கம்பெனிக்கு இந்தியாவில் 23 இடங்களில் தொழிற்கூடங்கள் இருந்தன. அவற்றில் கொல்கத்தாவின் வில்லியம் கோட்டை, சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டை, பம்பாய் (மும்பை) கோட்டை மற்றும் கடலூர் புனித டேவிட் கோட்டை ஆகியவை இந்தியாவில் ஆங்கிலேயரின் வணிக நோக்கங்களைப் பாதுகாத்த முக்கியக் கோட்டைகளாக இருந்தன.

அக்காலகட்டத்தில், ஆங்கிலேயரைப் போலவே, டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீ சியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் டேனிஷ்காரர்கள் உள்ளிட்ட ஐரோப்பிய நாட்டினரும் இந்தியாவில் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களுக்கிடையே கடுமையான வணிகப் போட்டியும் அதிகாரப் போட்டியும் உருவாகியது. அதனால், அடிக்கடி சண்டைகளும், போர்களும் நிகழ்ந்தன. அதன் காரணமாக ஆங்கிலேயர் கட்டிய கோட்டைகள் பலவும் அடிக்கடி சேதமடைந்தன.

இந்த ஆதிக்கவாதிகள் தங்களது பலத் தின் சின்னமாக கோட்டைகளைக் கருதினர்.

இத்தருணத்தில், இந்தியாவில் இருக் கும் கோட்டைகளைப் பலப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்பதை ஆங்கிலேயர்கள் உணர்ந்தனர். அப்பணியைச் சிறப்பாகச் செய்து முடிக்கும் பொருட்டு, முன்னோடி ஆங்கில அறிவியலாளரும், நியூட்டனிய கணித அறிஞரும், சிறந்த இராணுவப் பொறியாளருமான ஒருவரை இந்தியாவிற்கு அனுப்பினர். அவர்தான் ‘பெஞ்சமின் ராபின்ஸ்’

1707-ம் ஆண்டு இங்கிலாந்தின் பாத் நகரில் பிறந்து வளர்ந்த அவர், இயற்பியல் பேராசிரியர் ஹென்றி பெம்பர்டன் என்பவரின் அறிவுரையின் பேரில் லண்டனுக்கு வந்து அவரிடம் பயின்றார். ஒரு திறமைமிக்க பொறியாளராக உருவான அவர், இங்கிலாந்தில் பல பாலங்களையும், தொழிற்சாலைகளையும், துறைமுகங்களையும் கட்டமைத்தார்.

அதையும் தாண்டி பீரங்கிகளை வடிவமைக்கும் நுட்பத்தையும், கோட்டை கொத்தளங்களை உருவாக்கும் கலையையும் கற்றுத் தேர்ந்தார். 1942-ம் ஆண்டு அவர் எழுதிய, ‘பீரங்கிநுட்பத்தின் புதிய கோட்பாடுகள்’ என்றப் புத்தகம் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து, இயற்பியல், கணிதம், பீரங்கிநுட்பம், ஏவுகணைகள், கோட்டைகளை வடிவமைத்தல் குறித்த பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும், புத்தகங்களையும் அவர் எழுதினார்.

இந்தப் பின்னனியில் தான், 1749டிசம்பர் 8-ம் தேதி அன்று, ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியால் இந்தியாவின் இன்ஜினியர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார் அவர். கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தில் இருந்து கப்பலில் கிளம்பிய அவர்,1750-ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி கடலூரின் புனித டேவிட் கோட்டையில் வந்திறங்கினார்.

அவருக்கு வழங்கப்பட்டிருந்த அறிவு றுத்தல்படி, கடலூர் புனித டேவிட் கோட்டையை முழுமையாக ஆய்வு செய்த பின்னர், 1750ம் ஆண்டு செப்டம்பர்5-ம் தேதி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, அந்த இரு கோட்டைகளையும் எவ்வாறு சீரமைத் துப் பலப்படுத்த வேண்டும் என்பது குறித்ததனது திட்ட அறிக்கையை இங்கிலாந்திற்கு அனுப்பிவிட்டு, மார்ச் 1751-ல் கொல்கத் தாவின் வில்லியம் கோட்டைக்குச் சென்று இரு வாரங்கள் ஆய்வு செய்து பின்னர் கடலூருக்குத் திரும்பினார்.

இதற்கிடையில் 1750-ம் ஆண்டு முதலேபெஞ்சமினுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்துகொண்டிருந்தது. ஆனாலும், ஏற்றுக் கொண்ட பணியைத் தளராமல் செய்து கொண்டிருந்தார் அவர். இந்தநிலையில், 1751ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி அன்று, கடலூர் புனித டேவிட் கோட்டையில் அமர்ந்து, புனித ஜார்ஜ் கோட்டை, வில்லியம் கோட்டை மற்றும் புனித டேவிட் கோட்டை ஆகிய மூன்று கோட்டைகளையும் பலப்படுத்துவதற்கான தன்னுடைய விரிவான செயல்திட்ட அறிக்கையை இங்கிலாந்திற்கு அனுப்புவதற்காக தயார் செய்து கொண்டிருந்த போது, கையில் பேனாவைப் பிடித்தபடி அவர் அமர்ந்திருந்த மேஜையிலேயே உயிரிழந்தார்.

ஒரு பொறியாளராக மட்டுமல்லாமல், வரலாறு, பேச்சுக்கலை, கவிதை, இசை, கட்டிடக்கலை, சிற்பம் மற்றும் ஓவியம் எனப் பல்துறை ஆர்வம் கொண்டவராக இருந்த பெஞ்சமின் ராபின்ஸின் இழப்பு கோட்டைகளைப் பலப்படுத்துவதற்கான ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் திட்டங்களில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

தன் வாழ்நாளில் திருமணமே செய்து கொள்ளாத அவர், தன்னுடைய 44 - வது வயதிலேயே கடலூரில் இறந்தார். பல்கலை வித்தராக விளங்கிய பெஞ்சமினுக்கு, இயற்கை நீண்ட ஆயுளைத் தரவில்லை.

கடலூரில் அவர் இறந்தாலும், அவரு டைய கல்லறை கடலூரில் இல்லை.

தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட போதே, தனக்கு நேரப் போவதை நன்கு உணர்ந்த அவர், “என் மரணத்திற்குப் பின் என் உடல் லண்டனில் புதைக்கப்பட வேண்டும்” என உயில் எழுதி வைத்தி ருந்தார். அவரது விருப்பப்படியே அவரது உடல் இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

“இப்போதும் கடலூர் புனித டேவிட் கோட்டையைக் கடந்து செல்லும் போதெல்லாம் அக்கோட்டையினுள்ளே இந்தியாவின் இன்ஜினியர் ஜெனரல் பெஞ்சமின் ராபின்ஸ் கையில் பேனாவோடு அமர்ந்திருப்பதைப் போன்ற காட்சி நெஞ்சில் நிழலாடுவதைத் தவிர்க்க இயலவில்லை” என்கிறார் கடலூர் பெரியார் அரசு கல்லூரி வரலாற்றுத் துறை உதவி போரசிரியர் முனைவர் நா.சேதுராமன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x