Published : 12 Feb 2021 03:16 AM
Last Updated : 12 Feb 2021 03:16 AM

திமுக கூட்டணியில் புதிய கட்சி?

திமுக தொடங்கியது முதல் அக்கட்சியின் அடிப்படை வாக்கு வங்கியாக சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்களின் வாக்கு வங்கி இருந்து வருகிறது. அனைத்துத் தேர்தல்களிலும் ஏதாவது ஒரு முஸ்லிம் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வந்துள்ளது.

ஆனால், இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு முஸ்லிம் கட்சிகளால் புதுவிதமான சிக்கல் எழுந்துள்ளது. தற்போது திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி (மமக) ஆகிய 2 கட்சிகள் உள்ளன.கடந்த மக்களவைத் தேர்தலில் முஸ்லிம் லீக்குக்குமட்டும் திமுக தொகுதியை ஒதுக்கியது. மமக, தனிச் சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக இருந்ததால் அக்கட்சிக்கு திமுகவாய்ப்பளிக்கவில்லை. ஆனாலும், பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக திமுக கூட்டணியை மமக ஆதரித்தது.

தமிழகத்தைப் பொறுத்த அளவில் ஏராளமான முஸ்லிம் அமைப்புகள் உள்ளன. அரசியலில் தீவிரமாக இயங்கும் கட்சிகளே 10-க்கும் அதிகமாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக ‘சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா' (எஸ்டிபிஐ) கட்சி தமிழகத்தில் குறிப்பிடத்தக்க கட்சியாக வளர்ந்துள்ளது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பல தொகுதிகளில் அக்கட்சி குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றது. 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு சில இடங்களில் வென்று அரசியலில் தனது இருப்பை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

2016 பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைய கருணாநிதியுடன் எஸ்டிபிஐ கட்சி பேச்சு நடத்தியது. ஆனால், முஸ்லிம் லீக், மமக என 2 கட்சிகள் இருப்பதால் 3-வதாக ஒரு முஸ்லிம் கட்சியை சேர்க்க திமுக விரும்பவில்லை. அதே நிலை இந்தத் தேர்தலிலும் ஏற்பட்டுள்ளது.

திமுகவுக்காக தேர்தல் பணியாற்றி வரும் பிரபல தேர்தல் வியூக வல்லுநரான பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம், "ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருப்பதுபோல கட்சிக்காக எதையும் எதிர்பார்க்காமல் உழைக்கும் தொண்டர்களை எஸ்டிபிஐ உருவாக்கி வைத்துள்ளது. எனவே, அக்கட்சியை கூட்டணியில் சேர்க்க வேண்டும்" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

ஹைதராபாத் எம்பியான அசாதுதீன் ஓவைசியின் ‘அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் கட்சி' (ஏஐஎம்ஐஎம்) கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 5 தொகுதிகளில் வென்று தேசிய அளவில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏஐஎம்ஐஎம் கட்சி முஸ்லிம் வாக்குகளைப் பிரித்ததால்தான் லாலுபிரசாத் கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

பிஹாரைப்போல தமிழகத்திலும் முஸ்லிம் வாக்குகள்பிரிந்துவிடக் கூடாது என்று திமுகநினைக்கிறது. தமிழகத்திலும் போட்டியிடப் போவதாக ஓவைசிகட்சி அறிவித்ததைத் தொடர்ந்து, திமுக சிறுபான்மையினர் அணி மாநாட்டில் பங்கேற்க ஓவைசியை நேரில் சந்தித்து அக்கட்சியின் சிறுபான்மையினர் அணித் தலைவர் டாக்டர் மஸ்தான் அழைப்பு விடுத்தார். முஸ்லிம் லீக், மமக,காங்கிரஸின் எதிர்ப்பை தொடர்ந்து ஓவைசியை அழைக்கும் முடிவை திமுக கைவிட்டது.

எஸ்டிபிஐ கட்சியை கூட்டணியில் சேர்த்தால் திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சிகளின்எண்ணிக்கை 3 ஆகி விடும். ஏற்கெனவே,திமுகவை சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சி, இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பாஜக விமர்சனம் செய்து வருகிறது.

இந்நிலையில் எஸ்டிபிஐ கட்சியையும் சேர்த்தால் மதரீதியாக இந்துக்களின் வாக்குகள் திமுகவுக்கு கிடைக்காமல் போகலாம் என்று திமுக நினைக்கிறது. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் திமுக திணறி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் மக்கள் தொகைக்கு ஏற்க முஸ்லிம்களுக்கு குறைந்தது 20 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தி வருவதும் திமுக கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

2016 பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைய கருணாநிதியுடன் எஸ்டிபிஐ கட்சி பேச்சு நடத்தியது. ஆனால், முஸ்லிம் லீக், மமக என 2 கட்சிகள் இருப்பதால் 3-வதாக ஒரு முஸ்லிம் கட்சியை சேர்க்க திமுக விரும்பவில்லை. அதே நிலை இந்தத் தேர்தலிலும் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x