Published : 09 Feb 2021 10:03 PM
Last Updated : 09 Feb 2021 10:03 PM

ஏப்ரல் 2 முதல் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் நின்று செல்லும்: எம்.பி. வேலுச்சாமி தகவல் 

திண்டுக்கல் 

சென்னை- மதுரை இடையே செல்லும் தேஜஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது என திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி தெரிவித்தார்.

சென்னை- மதுரை எழும்பூர் இடையே சென்றுவரும் தேஜஸ் ரயில் மதுரையில் புறப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையத்தில் மட்டும் நின்று சென்றது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லாததால் திண்டுக்கல் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் தேஜஸ் ரயிலில் சென்னைக்குப் பயணிக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் நின்றுசெல்ல வேண்டும் என வர்த்தகர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர்.

இதுகுறித்து திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி வர்த்தகர்கள் உள்ளிட்டோருடன் சென்று மதுரை கோட்ட ரயில்வே அதிகாரியிடம் மனு அளித்தார். தொடர்ந்து டெல்லியில் ரயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மதுரை- சென்னை தேஜஸ் ரயில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி கூறியதாவது:

''திமுக மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி தேஜஸ் ரயிலை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் திண்டுக்கல்- திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்லவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் சென்னை- மதுரை தேஜஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 2-ம் தேதி முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பயணிகளும் எளிதாக திண்டுக்கல்லில் இருந்து தேஜஸ் ரயிலில் பயணிக்கலாம். மற்றொரு கோரிக்கையான அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்லவேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். விரைவில் இதற்கும் தீர்வு காணப்படும்''.

இவ்வாறு எம்.பி. வேலுச்சாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x