Published : 09 Feb 2021 09:25 PM
Last Updated : 09 Feb 2021 09:25 PM

கிருபானந்த வாரியாரின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்: வேலூரில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

வேலூர்

திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25-ம் தேதி இனி அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று வேலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் இன்று (பிப்.9) இரவு நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

‘‘தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுகதான். 30 ஆண்டுகள் ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் எப்போதும் திறந்த டெண்டர்தான் விடப்படும். இ-டெண்டர் என்பதால் வீட்டில் இருந்தே டெண்டர் போடலாம். இதை யாரும் மறைக்க முடியாது. ஊழல் செய்ய முடியாது.

திமுக ஆட்சியில் பொதுப்பணித் துறையில் டெண்டர் விட்டார்கள். புதிய தலைமைச் செயலகம் கட்ட ரூ.210 கோடியில் டெண்டர் விட்டு ரூ.430 கோடிக்குப் பணம் பட்டுவாடா செய்தார்கள். அதுதான் ஊழல். இந்த வழக்கிற்குத்தான் ஸ்டாலின் தடையாணை வாங்கியுள்ளார். எங்களுக்கு மடியில் கனம் இல்லை, வழியில் பயமில்லை. எங்கே அழைத்தாலும் நான் வரத் தயார்.

மக்களைக் குழப்பி ஆதாயம் தேடி வெற்றிபெற முடியாது. ஸ்டாலின் நேர்வழி சென்றால் எதிர்க்கட்சியாது மிஞ்சும். மக்களை ஏமாற்றி நாம் வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். எல்லாவற்றிலும் மறைத்து எதையும் செய்ய முடியாது.

சிறந்த ஆட்சியை அதிமுக செய்கிறது. தேசிய அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளது. உள்ளாட்சி துறையில் மட்டும் 143 விருதுகளைப் பெற்றுள்ளது. நீங்களும் (ஸ்டாலின்) உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தீர்கள். திறமை இருந்தால்தானே விருது பெற முடியும். நாங்கள் திறமையாகச் செயல்படுகிறோம், தேசிய அளவில் விருது பெருகிறோம். பாலாற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். தமிழகத்தில் ரூ.1000 கோடியில் தடுப்பணைப் பணிகள் நடக்கின்றன.

திமுக ஒரு கட்சி இல்லை. அது கார்ப்பரேட் கம்பெனி. சட்டப்பேரவையில் அதிக முறை உறுப்பினராக இருந்தவர் துரைமுருகன். அவரை மக்களுக்குத் தெரியாதா? ஆனால், உதயநிதி போய்தான் பிரச்சாரம் செய்கிறார். மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதுதான் சட்டப்பேரவை. அந்தப் பேரவையில் திமுகவினர் ரகளை செய்கின்றனர். திமுக ஆட்சிக் காலத்தில் பெண்கள் சுதந்திரமாக வீதியில் நடமாட முடியாது. திமுக ஆட்சிக்கு வந்தால் வேலூர் பகுதியில் கண்ணில் படும் இடங்களை எல்லாம் வேலி போட்டு விடுவார்கள்.

அதிமுகவைப் பின்னடைவு செய்ய டிடிவி தினகரன் முயன்று வருகிறார். அவர் பத்தாண்டுகள் கட்சியில் கிடையாது. அம்மா மறைவுக்குப் பிறகு கட்சியில் இணைந்ததாக அறிவித்துக் கொண்டார். கட்சியைக் கைப்பற்ற எங்களின் 18 எம்எல்ஏக்களை அழைத்துச் சென்று நடுரோட்டில் விட்டுவிட்டார். அவரை நம்பிப் போனால் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வருவதை முறியடிப்போம். திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த ஆகஸ்ட் 25-ம் நாள் இனி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்’’

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

அரியர் தேர்வு ரத்து?

முதல்வர் பழனிசாமி பேசும்போது, கூட்டத்தில் இருந்த சிலர் மாணவர்களின் அரியர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், வரும் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பினர். அதற்கு முதல்வர் உங்கள் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.

தொடர்ந்து பேசும்போது, சிலர் கல்விக் கடன் ரத்து செய்ய வேண்டும் என்றனர். அதற்கு தேர்தல் அறிக்கையில் வரும் என்றார் முதல்வர் பழனிசாமி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x