Published : 08 Feb 2021 03:55 PM
Last Updated : 08 Feb 2021 03:55 PM

காரைக்காலில் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் 'மெடி சிட்டி' அமைக்க நடவடிக்கை: புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி தகவல்

காரைக்காலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கு புறவழிச்சாலைக்கான பெயர்ப் பலகையை திறந்து வைத்த புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி.

காரைக்கால்

காரைக்காலில் ரூ.2,000 கோடி செலவில் 'மெடி சிட்டி' அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி கூறியுள்ளார்.

காரைக்காலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கு புறவழிச் சாலைக்கு, டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி சாலை என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், அதற்கான பெயர்ப் பலகை திறப்பு நிகழ்ச்சி இன்று (பிப். 8) நடைபெற்றது.

இதில், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி கலந்து கொண்டு பெயர்ப் பலகையை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மறைந்த போது, கருணாநிதியின் பெயரில் மேற்படிப்பு மையம், அவருக்கு வெண்கல சிலை அமைப்பது, காரைக்கால் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்டுவது என்பன உள்ளிட்ட முடிவுகள் அமைச்சரவையில் எடுக்கப்பட்டது.

வெண்கல சிலை அமைக்க இடம் தெரிவு செய்து துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அவர் சட்ட வல்லுநர்களிடம் கருத்து கேட்க வேண்டும் என சொன்னதால் தாமதம் ஏற்படுகிறது.

காரைக்காலில் ஓரிரு நாட்களுக்கு முன் மேற்கு புறவழிச்சாலை திறக்கப்பட்டது. அப்போது சாலைக்கான பெயர்ப் பலகை தயாராக இல்லை. தற்போது பெயர்ப் பலகை திறக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சிலர் இதனை பூதாகரமாக்கி அரசியல் செய்ய நினைத்தார்கள். சாலைக்கான பெயர் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

காரைக்கால் பிராந்திய வளர்ச்சிக்கு புதுச்சேரி அரசு தனிக் கவனம் செலுத்தி, படிப்படியாக திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

ரூ.2,000 கோடி செலவில் 'மெடி சிட்டி' என்ற ஒரு திட்டத்தை காரைக்காலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில், அலோபதி, சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதா, யுனானி மருத்துவம், யோகா, இயற்கை வைத்தியம், மூலிகை செடிகள் வளர்ப்பு என்ற மிகப்பெரிய அளவில், 10 ஆயிரம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பை கொடுக்கும் வகையில் இத்திட்டம் அமைய உள்ளது.

சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இணைந்து இதனை செயல்படுத்த இசைந்துள்ளன. இது குறித்து கடந்த சனிக்கிழமை அந்நிறுவனங்களுடன் காணொலிக்காட்சி மூலம் பேசினேன். மிகவிரைவில் காரைக்காலில் இதற்கான மூலதனம் வரவுள்ளது" என்றார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டோம் என அனைவரும் முடிவெடுத்தால் காங்கிரஸ் அந்த முடிவை ஏற்குமா? என எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி கேள்வி எழுப்பியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "தேர்தலை புறக்கணிப்பது குறித்து கட்சி தலைமையிடம்தான் பேச வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கொள்கை. சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தேர்தல் வரும் போது மாநில அந்தஸ்து குறித்துப் பேசுகிறார்.

ஆட்சியின் முதல் ஆண்டிலேயே நாங்கள் இப்பிரச்சினையை எழுப்பினோம், அப்பொதேல்லம் எதுவும் பேசாமல் இருந்துவிட்டு, தற்போது பேசுவதில்ருந்து அவரது உள்நோக்கத்தை அறிந்துகொள்ள முடியும். கூட்டணி குறித்து சோனியா கந்தி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் முடிவு செய்வார்கள்" என கூறினார்.

மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.ஹெச்.நாஜிம் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x