Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM

சசிகலா குறித்து யாரும் எதுவும் பேச வேண்டாம்: அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுறுத்தல்

சசிகலா நாளை தமிழகம் வரவுள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ‘சசிகலா குறித்து யாரும்வெளியில் எதுவும் பேச வேண்டாம்’ என்று ஒருங்கிணைப்பாளர் கள் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுறுத் தியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில்,ஆளுங்கட்சியான அதிமுக இன்னும் கூட்டணியை இறுதி செய்யாவிட்டாலும், தேர்தலுக்கான அடிப்படை பணிகளை பெரும்பாலும் முடித்து, முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார்.

இந்நிலையில்தான், ஜெயலலிதாவின் தோழி சசிகலாசிறையில் இருந்து விடுதலையாகி, அதிமுகவின் கொடியை பயன்படுத்தியதுடன், நான்தான் பொதுச்செயலாளர் என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஆனால், சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100 சதவீதம்வாய்ப்பே இல்லை என்றுஅதிமுக தலைமை திட்டவட்ட மாக தெரிவித்துள்ளது. சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் சிலர் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்ட, அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டு, அதன்பிறகு அதிமுக திரும்பிய நிர்வாகிகள் பலருக்கு புதிய பொறுப்புகளை வழங்கி வருகிறது.

இதற்கிடையில், பெங்களூருவில் இருந்து சசிகலா நாளை தமிழகம் வருகிறார். அவரை வரவேற்க அமமுகவினர் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில், பொதுச் செயலாளராகவே வருவதாக டிடிவி தினகரன் தொடர்ந்துகூறி வருகிறார். இதற்கு எதிராகஅதிமுக சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்களுடன் அவைத் தலைவர் மதுசூதனன்தலைமையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் தொடர்பாக அதிமுக வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘அதிமுகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும் கட்சிப் பணிகளை, கடமை உணர்வுடன் ஆற்றுவது, சட்டப்பேரவை பொதுத்தேர்தலை ஒட்டி, அரசின்சாதனைகளை பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள், விளம்பரங்கள் வாயிலாக அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்களிடம் விரிவாக கொண்டு சேர்ப்பது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ‘எத்தனை நூறாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்’ என்ற கனவை நனவாக்கும் வகையில், ஒற்றுமையுடன் விழிப்புடன் தேர்தல் பணியாற்றி அதிமுகவுக்கு வெற்றியைஈட்டித் தருவது ஆகியவைதொடர்பாக கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணைஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்’ என்று கூறப்பட்டுள்ளது.

கூட்டம் தொடர்பாக அதிமுகநிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘தேர்தலின்போது ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். சசிகலா குறித்து நிர்வாகிகள் யாரும் வெளியில் எதுவும் பேசக்கூடாது என்று அறிவுறுத்தினர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புநமக்கு சாதகமாக உள்ளது. அதன்படி கட்சியை நடத்தி வருகிறோம். சசிகலா பக்கம் யாரும் சென்றுவிடாமல், அவர்களுக்கு தேவையானவற்றை செய்துதாருங்கள். மற்றவற்றை நாங்கள்பார்த்துக் கொள்கிறோம் என்றுஅறிவுறுத்தியுள்ளனர். பிப்.14-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வருவதால் அவர்வருகை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x