Published : 02 Feb 2021 05:29 PM
Last Updated : 02 Feb 2021 05:29 PM

ஆளுநர் உரையில் புதிய அறிவிப்புகள் இல்லை:; பதில் உரையிலாவது இருக்க வேண்டும்: ராமதாஸ்

ஆளுநர் உரை என்பது பின்னால் வரப்போகும் யானையின் வருகையை உணர்த்துவதற்காக முன்னால் வரும் மணியோசை ஆகும். வரும் ஆண்டில் அரசு என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்தப் போகிறது என்பதற்கான முன்னோட்ட அறிவிப்புகளை வெளியிடுவதற்காக அரசுக்குக் கிடைத்துள்ள வாய்ப்புதான் ஆளுநர் உரை ஆகும். ஆனால், அப்படி எதுவும் இல்லை என ராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“2021ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியுள்ளது. ஆளுநரின் சட்டப்பேரவை உரை நிதிநிலை அறிக்கைக்கு முன்னோட்டமாக இருக்கும், அதில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெறும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், புதிய அறிவிப்புகள் எதுவும் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தது, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கியது, சரக்கு மற்றும் சேவை வரியில் மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய நிலுவைத் தொகையைப் பெற்றது, கரோனா காலத்திலும் ரூ.60,674 கோடி முதலீட்டை ஈர்த்தது, இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கியது என தமிழக அரசைப் பாராட்டும் அறிவிப்புகள்தான் ஆளுநர் உரை முழுவதும் நிரம்பியிருக்கின்றன. அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் உரையில் பாராட்டுகள் தெரிவிக்கப்படுவது வழக்கமானதே, தவறு இல்லை.

ஆனால், ஆளுநர் உரை என்பது பின்னால் வரப்போகும் யானையின் வருகையை உணர்த்துவதற்காக முன்னால் வரும் மணியோசை ஆகும். வரும் ஆண்டில் அரசு என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்தப் போகிறது என்பதற்கான முன்னோட்ட அறிவிப்புகளை வெளியிடுவதற்காக அரசுக்குக் கிடைத்துள்ள வாய்ப்புதான் ஆளுநர் உரை ஆகும். இது தேர்தல் ஆண்டு என்றாலும் கூட, இடைக்கால நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்களை அறிவிப்பதற்கோ, அதுகுறித்த அறிவிப்புகளை ஆளுநர் உரையில் வெளியிடுவதற்கோ எந்தத் தடையும் இல்லை.

ஆனால், ஆளுநர் உரையில், ‘‘முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம்’’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும்; அம்மையத்தை 1100 என்ற எண்களில் தொடர்புகொண்டு மக்கள் தெரிவிக்கும் குறைகள் அனைத்தும் களையப்படும் என்ற ஒற்றை அறிவிப்பைத் தவிர வேறு புதிய அறிவிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை.

பொதுமக்கள் இலவச தொலைபேசி அழைப்பு மூலம் அரசைத் தொடர்புகொண்டு குறைகளைத் தெரிவிக்கும் திட்டம் பாமகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று இருந்த திட்டம்தான். அந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி; இந்தத் திட்டம் வரவேற்கத்தக்கதாகும்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசும்போது, புதிய திட்டங்களை அறிவிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் மக்கள் நலத் திட்டங்களை முதல்வர் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x