Published : 01 Feb 2021 05:27 PM
Last Updated : 01 Feb 2021 05:27 PM

திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து; மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி: கிருஷ்ணகிரியில் மு.க.ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து; மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி, கே.பூசாரிப்பட்டி சாலையில் நடைபெற்ற, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளித்து ஸ்டாலின் பேசியதாவது:

''மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி:

1990ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் இந்த நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான் மக்கள் நலப் பணியாளர்கள் திட்டம். 13,500 மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஆனால், 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். மக்கள் நலப்பணியாளர்கள் கட்சி சார்பில் நாம் தேர்ந்தெடுக்கவில்லை.

முறையாக அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சென்று முறைப்படி நேர்காணல் வைத்து தேர்ந்தெடுத்தோம். ஆனால், அதிமுக ஆட்சியில் சத்துணவு அமைப்பாளர்கள், அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால் போதும், அத்தனை பேரையும் தேர்ந்தெடுத்து வைத்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேலை இழந்து தவித்துக் கொண்டிருக்கும பணியாளர்களுக்கு அல்லது அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு மீண்டும் அந்தப் பணி வழங்கப்படும் என்ற உறுதியை, நம்பிக்கையை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கிருஷ்ணகிரி – தருமபுரி தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு:

கிருஷ்ணகிரி – தருமபுரி, இந்த 2 மாவட்டங்களுடைய பிரதான பிரச்சினை குடிநீர்தான். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் வந்தால் குடிநீர்ப் பிரச்சினை தீர்ந்துவிடும். இங்கு கிடைக்கும் தண்ணீரில் அதிகப்படியாக ப்ளோரைடு கலந்து வருகிறது. இதனால் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள், கேன்சர் நோய்கள் வரும் நிலை இருந்தது. இந்த நிலையைப் போக்க வேண்டும் என்பதற்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்வந்தார்.

இதற்காக ஜப்பான் நாட்டிற்கு என்னை அனுப்பி வைத்தார்கள். அந்த நாட்டிற்குச் சென்று அங்கு இருக்கும் வங்கி நிர்வாகிகளிடம் பேசி, அதற்குப் பிறகு நிதியைப் பெற்று வந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றினோம். அதற்குப் பிறகு அந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு நம்முடைய தலைவர் கலைஞர் நேரடியாக தருமபுரிக்கு வந்து அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் என்பது வரலாறு.

கிட்டத்தட்ட 99 சதவீதம் அந்தப் பணி முடிந்துவிட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. அதற்குப் பிறகு அந்த திட்டத்தை அதிமுகவினர் உடனே நிறைவேற்றி இருக்கலாம். ஆனால், அவர்கள் நிறைவேற்றவில்லை. காரணம் இந்த திட்டம் வந்துவிட்டால் திமுகவிற்குப் பெயர் வந்துவிடும் என்ற எண்ணம்தான்.

அதற்குப் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினோம். அதற்குப் பிறகு ஜெயலலிதா அந்தத் திட்டத்தை திறந்து வைத்தார் என்பது வரலாறு.

இருந்தாலும் இன்னும் சில கிராமங்களில் குடிநீர் வரவில்லை என்ற குறைபாடு இருக்கிறது. 4 மாதங்களில் நாம் ஆட்சிக்கு வந்தவுடன், அந்தப் பணியை எடுத்து நிறைவேற்றுவேன் என்ற அந்த உறுதியை நிச்சயம் உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கல்விக் கடன் ரத்து செய்யப்படும்:

கல்விக் கடனை ரத்து செய்வோம் என்று நாம் நாடாளுமன்றத் தேர்தலின்போது சொன்னோம். ஆனால், நாம் மத்தியில் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஆனால் இப்போது சட்டப்பேரவைத் தேர்தலின்போது சொல்கிறோம். நாம் ஆட்சிக்கு வந்தபிறகு நம் அரசின் சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தி, வற்புறுத்தி நிச்சயமாக, உறுதியாக கல்விக் கடனை ரத்து செய்வோம் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. இப்போது கூட தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் சேர முடியாமல் தவித்த அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுகவே ஏற்கும் என்று சொல்லி அதைச் செலுத்தி, பல பேருக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறோம்.

'துரோகம் செய்யும் முதல்வர்':

விவசாயிகளினுடைய 7000 ரூபாய் கடனை முழுவதுமாகத் தள்ளுபடி செய்தது திமுக ஆட்சி என்பது உங்களுக்குத் தெரியும். விவசாயிகளுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அந்த அளவிற்கு திமுக முக்கியத்துவம் கொடுக்கும். ஆனால் இப்போது இருக்கும் ஆட்சி அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய போது, அதை ஆதரித்தது அதிமுக அரசு. விவசாயிகளுகு பச்சை துரோகம் செய்துவிட்டு பச்சைத் துண்டைப் போட்டு விவசாயி எனச் சொல்லிக் கொள்கிறார் முதல்வர் பழனிசாமி.

100 நாட்களில் தீர்வு:

திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் இந்தப் பெட்டியில் இருக்கும் மனுக்களெல்லாம் பிரிக்கப்பட்டு, அந்தப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும். இப்போது இந்தப் பெட்டியை உங்களுக்கு முன்னால் பூட்டு போட்டு, சீல் வைக்கப் போகிறோம். இந்த சீல், நம்முடைய ஆட்சி உருவாகி, பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அடுத்த நாள் திறக்கப்படும். இந்த மனுக்கள் அனைத்தும் பிரித்துப் பரிசீலிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 100 நாட்களில் அவற்றில் கோரப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவேன் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நரிக்குறவர்களைப் பட்டியலினச் சமுதாயத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும்.

கரோனா என்பது கொடுமையான காலம். வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் கொடுமையில் மக்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அதைப் பற்றிக் அரசாங்கம் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. அதைப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளையடித்த ஆட்சிதான் இந்த ஆட்சி.

இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகத்தான் நாம் கூடியிருக்கிறோம். இங்கே திரண்டு இருக்கிறோம். மனுக்களை எல்லாம் என்னை நம்பிக்கொண்டு வந்து கொடுத்திருக்கிறீர்கள். கொடுத்திருக்கிறீர்கள் என்று சொல்லவில்லை, என் முதுகில் ஏற்றி வைத்திருக்கிறீர்கள்.

உங்கள் நம்பிக்கைக்கு ஏற்றவகையில் அந்தப் பணிகளை, ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த நாள், இந்த பெட்டி திறக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து 100 நாட்களுக்குள் அனைத்துக் கோரிக்கைகளையும் முடித்துத் தருவேன். இது உறுதி… உறுதி… உறுதி''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x