Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

புற்றுநோய் சிகிச்சைக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்

சென்னை மயிலாப்பூரில் 1927 ஜனவரி 11-ம் தேதி பிறந்த வி.சாந்தா, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை பூர்வீகமாக கொண்டவர். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் சர் சி.வி.ராமன், எஸ்.சந்திரசேகர் குடும்பத்தில் பிறந்த இவரும், அறிவியல் துறையில் சாதிக்க வேண்டும் என்று குடும்பத்தினர் விரும்பினர். இவருக்கோ ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமே இருந்ததால், மருத்துவத் துறையை தேர்வு செய்தார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949-ல்எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். மருத்துவ சேவையில் ஈடுபட்டுக் கொண்டே 1952-ல் மகளிர், மகப்பேறு மருத்துவத்தில் டிப்ளமாவும், 1955-ல் அத்துறையில் முதுநிலை மருத்துவப் படிப்பையும் முடித்தார். புற்றுநோய் சிகிச்சையில் ஏற்பட்ட ஆர்வத்தால் அத்துறையில் பணியாற்றினார்.

12 படுக்கையுடன் ஆரம்பித்த மருத்துவமனை

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி தனது தங்கை புற்றுநோயால் இறந்த பிறகு, பல கட்ட இன்னல்கள், சவால்களைகடந்து, தீவிர முயற்சிக்கு பின்னர் இந்திய பெண்கள் சங்கம் மூலம் திரட்டப்பட்ட ரூ.1 லட்சம் நிதியைக் கொண்டு தென்னிந்தியாவில் முதன்முதலாக அடையாறு காந்தி நகரில் 1954-ல்புற்றுநோய் மருத்துவமனை தொடங்கினார்.

முத்துலட்சுமி ரெட்டியின் அழைப்பை ஏற்று,12 படுக்கைகள் கொண்ட அந்த சிறிய மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கினார் சாந்தா. அங்கு மருத்துவராகப் பணியாற்றி வந்த முத்துலட்சுமி ரெட்டியின் மகன் கிருஷ்ணமூர்த்தியை தனது குருவாக ஏற்று பணியாற்றியபடியே, வெளிநாடுகளில் புற்றுநோய் சிகிச்சை தொடர்பான பல்வேறு படிப்புகளை படித்தார். அவர்களுடன் செவிலியர்கள் சம்பூரணம், தைலம்மா ஆகியோரும் அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்தனர்.

சாந்தா, கிருஷ்ணமூர்த்தியின் விடாமுயற்சியாலும், அயராத உழைப்பாலும் மருத்துவமனை மெல்ல வளர்ச்சி அடையத் தொடங்கியது. அங்கு இடப் பற்றாக்குறை இருந்ததால், அடையாறு சர்தார் பட்டேல் சாலையில் ஒரு மருத்துவமனை (அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்) தொடங்கப்பட்டது. அங்கு குழந்தைகளுக்காக புற்றுநோய் சிகிச்சை மையமும் தொடங்கப்பட்டது.

மருத்துவமனை அறைதான் வாழ்விடம்

திருமணம் செய்துகொள்ளாமல் புற்றுநோய்சிகிச்சைக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்த மருத்துவர் சாந்தா, இந்த மருத்துவமனையை உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை மையமாக உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். அடையாறு காந்தி நகரில் உள்ள பழைய புற்றுநோய் மருத்துவமனையின் மாடியில் இருக்கும் சிறிய அறையில்தான் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்தார். எளிமையான வாழ்க்கை வாழ்ந்தஅவர் லட்சக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சைகிடைக்க வழிவகை செய்தார். புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை முறைகளையும் கொண்டுவந்தார். புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுவந்தார். சர்வதேச அளவில் புற்றுநோய் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தில் புற்றுநோய் தொடர்பான ஆலோசனைக் குழு உறுப்பினர், புற்றுநோய் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் என்பது உட்பட பல்வேறு குழுக்களில் பணியாற்றியுள்ளார். பல மருத்துவர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

மத்திய அரசு சார்பில் பத்ம, பத்மபூஷண், பத்மவிபூஷண், தமிழக அரசு சார்பில் அவ்வையார் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். விருதுகள் மூலம் கிடைக்கும் தொகையையும் மருத்துவமனையின் வளர்ச்சிக்கே பயன்படுத்தினார். 12 படுக்கைகள், 2 மருத்துவர்கள், 2 செவிலியர்களுடன் தொடங்கப்பட்ட மருத்துவமனை இன்று 650 படுக்கைகளுடன் மருத்துவர்கள், செவிலியர்கள் என 1,000 பேருடன் மிகவும் பிரம்மாண்டமாக வளர்ச்சி பெற்று, உலக அளவில் பிரபலமாகி உள்ளது. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் முழுமையாக குணப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையை பொதுமக்களிடம், குறிப்பாக ஏழை மக்களிடம் ஏற்படுத்திய மருத்துவர் வி.சாந்தாவின் மறைவு மருத்துவ உலகுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x