Published : 27 Oct 2015 03:28 PM
Last Updated : 27 Oct 2015 03:28 PM

பட்டம் கிடைக்கவில்லை; மதிப்பெண் பட்டியலிலும் குளறுபடி: குரும்பலூர் கல்லூரி முன்னாள் மாணவர்கள் வேதனை

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் செயல்படும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், தாங்கள் படிப்பை முடித்தும் பட்டம் வழங்கப்படவில்லை என்றும், குளறுபடிகளுடன் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுவதாகவும் ‘தி இந்து- உங்கள் குரல்’ பகுதியில் தெரிவித்துள்ளனர்.

அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் அரும்பாவூரைச் சேர்ந்த வசந்த் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் அரசுக் கல்லூரியான குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில், மாவட்டத்தின் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர் படிக்கின்றனர். இக்கல்லூரியில் கடந்த பல ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை.

அதேபோல, பல்கலைக்கழகத் தால் வழங்கப்படும் மதிப்பெண் பட்டியல் ஏகப்பட்ட குளறுபடிகள் மற்றும் தவறுகளுடன் மாணவர்களிடம் வழங்கப்படுகிறது. இதை சரி செய்வதற்காக தனிக் கட்டணம் செலுத்துவதுடன், ஒவ்வொருமுறையும் இங்கிருந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்துக்குச் சென்று வரவேண்டியுள்ளது. இதனால் அலைச்சல், மன உளைச்சல் என மாணவர்கள் அவதிக்குள்ளாகிறார்கள்.

மேலும், குரும்பலூர் கல்லூரி மூலம் நடத்தப்படும் தொலைதூரக் கல்வியில் அதன் அர்த்தத்தை இழக்கும் வகையில் எந்தவொரு தகவல் தொடர்பு மற்றும் அறிவிப்புகளையும் முறையாக வீட்டுக்கு அனுப்புவதில்லை. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டும் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

கல்லூரியின் பிற முன்னாள் மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தில் பணிபுரியும் சிலர் வாயிலாக இத்தகவலை உறுதி செய்துகொண்ட பிறகு, கல்லூரி முதல்வர் முனைவர் என்.ராஜாராமனிடம் கேட்டபோது அவர் அளித்த விளக்கம்: நான் இந்த கல்லூரிக்கு முதல்வராகப் பொறுப்பேற்று 4 மாதமே ஆகிறது. கடந்த 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா தவிர்க்க இயலாத சில காரணங்களால் நடைபெறவில்லை. பட்டமளிப்பு விழா நடைபெறவில்லையே தவிர, பட்டம் வேண்டும் மாணவர்களுக்கு அவை முறையாக வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் எவரும் பாதிப்படையவில்லை.

மதிப்பெண் பட்டியலில் தவறு என்று சொல்ல முடியாது. தாமதக் கட்டணம், தேர்வுகளில் விதிமீறல் உள்ளிட்ட மாணவர் தரப்பு தவறுகளால் குறிப்பிட்ட மதிப்பெண்களை நிரப்பாது அந்த இடத்தில் நட்சத்திரக் குறியீட்டுடன் மதிப்பெண் பட்டியல் சிலருக்கு மட்டுமே வருகிறது. அவர்களும் முதல்வர் வாயிலாக பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்துக்கு சென்று முறையிட்டால், அவையும் உரிய வகையில் சரிசெய்யப்பட வாய்ப்புண்டு. தொலைதூரக் கல்வியைப் பொறுத்தவரை, வகுப்புகள் எடுப்பதோடு குரும்பலூர் கல்லூரி நிர்வாகத்தின் பொறுப்பு முடிகிறது.

எனினும், இவை உட்பட மதிப்பெண் பட்டியல் தவறுகள் போன்றவற்றுக்காக மாணவர்களின் அலைச்சல் குறித்தும், பல்வேறு நடைமுறை பிரச்சினைகள் குறித்தும் அண்மையில் நடைபெற்ற கல்லூரி முதல்வர்கள் கூட்டத்தில் துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளோம். அவற்றை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக பல்கலைக்கழக தரப்பிலும் உறுதி அளித்துள்னர்.

மேலும், வரும் நவம்பர் 5-ம் தேதி பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடப்பதை முன்னிட்டு, அதன் பின்னர் துணைவேந்தரிடம் அனுமதி பெற்று குரும்பலூர் கல்லூரி வளாகத்தில் பட்டமளிப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவை குறித்து முன்னாள் மாணவர்களுக்கு அப்போது தெரிவிக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x