Published : 07 Jan 2021 03:15 AM
Last Updated : 07 Jan 2021 03:15 AM

வேளாண் சட்ட விவகாரத்தில் இடைத்தரகர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் செயல்படுகிறார்: பாஜக செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டு

வேளாண் சட்ட விவகாரத்தில் இடைத்தரகர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

“3 வேளாண் சட்டங்களை மத்திய பாஜக அரசு இயற்றியுள்ளது. இனி விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் அவர்கள் நினைக்கும் விலைக்கு விற்க முடியாது. உழவர் சந்தைகள் இனி கிடையாது. அது கார்ப்பரேட்டுகளுக்கு போகப் போகிறது" என்று கடலூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

அரசியல் லாபத்துக்காக உண்மைக்கு புறம்பான தகவல்களை மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. குறைந்தபட்ச ஆதார விலைக்கு விற்காத விளைபொருட்களை, விவசாயிகள் நினைக்கும் விலைக்கே விற்பதற்குத்தான் ஒப்பந்த சட்டம் வந்துள்ளது என்பதே உண்மை.

இதுநாள் வரை விவசாயிகள் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி உழைத்து செய்த விவசாயத்தால் அரசியல் இடைத்தரகர்களே பயன்பெற்று வந்த நிலை மாறி இனி விவசாயிகள் நேரடியாக அதிக லாபமீட்ட முடியும் என்பதாலேயே வேளாண் சட்டத் திருத்தங்களை மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது.

உழவர்கள், சந்தைக்கு சென்றுகொண்டிருந்த நிலை மாறி, சந்தையே உழவர்களைத் தேடி வரச் செய்யும் புதிய சட்டங்களே இவை. சாதாரண சிறு குறு விவசாயிகள் பயனடைந்தால், இடைத்தரகர்கள் வருமானத்தை இழந்து விடுவார்கள். யாரோ சில இடைத்தரகர்களுக்கு ஆதரவாகவும், விவசாயிகளின் நலனுக்கு எதிராகவும் ஸ்டாலின் பேசுகிறார் என்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x