Last Updated : 31 Dec, 2020 06:17 PM

 

Published : 31 Dec 2020 06:17 PM
Last Updated : 31 Dec 2020 06:17 PM

நெல்லையிலிருந்து மதுரை, நாமக்கல் வழியாக பெங்களூருக்கு ஜனசதாப்தி ரயில் இயக்கப்படுமா?- பயணிகள் எதிர்பார்ப்பு

திருநெல்வேலியிலிருந்து மதுரை, நாமக்கல் வழியாக பெங்களூருக்கு ஜனசதாப்தி ரயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

தென்மாவட்டங்களிலிருந்து பெங்களூருக்கு தற்போது தினசரி ரயிலாக நாகர்கோவில் - பெங்களூரு ரயில் மற்றும் தூத்துக்குடி – மைசூர் என 2 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்களில் தென்மாவட்ட பயணிகளுக்கு மிக குறைந்த அளவே இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில்களில் விரைவில் முன்பதிவு நிரம்பிவிடுகின்றது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பயணிகளுக்கு இரவு நேர ரயிலாக நாகர்கோவில்- பெங்களூரு ரயில் மட்டுமே உள்ளது.

இந்த ரயிலும் பெங்களூருக்கு காலை 9.30 மணிக்கு பின்னரே சென்று சேருகிறது. இதனால் தேர்வுகள், அலுவலக பணிக்கு செல்வோர், ஐடி நிறுவனங்களில் நேர்காணலுக்கு செல்வோர் இந்த ரயிலில் செல்வது கிடையாது. அதிக கட்டணம் செலுத்தி தனியார் ஆம்னி பேருந்துகளில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலியிலிருந்து மதுரை, நாமக்கல் வழியாக பெங்களூருக்கு ஜனசதாப்தி ரயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பாக ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறும்போது, இந்திய ரயில்வேத்துறை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு பல பெயர்களில் அதிவேக ரயில்களை இயக்கி வருகிறது. இந்த ரயில்கள் ராஜதானி ரயில், டோரோண்டோ ரயில், சதாப்தி ரயில், ஜனசதாப்தி ரயில், கரீப்ரத் ரயில், டபுள்டக்கர் ரயில்,முழுவதும் குளிர்சாதன ரயில், அந்தோதையா, உதய் என்ற பெயர்களில் இயக்கப்படுகிறது.

ஜனசதாப்தி என்ற பெயரில் பகல்நேரத்தில் இயக்கப்படும் ரயில்களாகும். இந்த ரயில்களில் சதாரண நடுத்தர பயணிகள் பயணிக்கும் வகையில் 2-ம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

தமிழகத்தில் இது போன்று இயக்கப்படும் ரயில்களில் ஜனசதாப்தி ரயில் கோவை – மயிலாடுதுறை மற்றும் சென்னை – விஜயவாடா ஆகிய இரு தடத்தில் மட்டுமே தமிழகத்தில் இயக்கப்படுகிறது.

தென்மாவட்ட பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு திருநெல்வேலிருந்து மதுரை, நாமக்கல், ஓசூர் வழியாக பெங்களூருக்கு பகல்நேர ஜனசதாப்தி தினசரி ரயில் இயக்கினால் தென்மாவட்டங்களிலிருந்து பெங்களூருக்கு செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இரவு நேர ரயில்களில் உள்ள கட்டணத்தை காட்டிலும் பகல்நேரங்களில் இயக்கப்படும் ரயில்களில் கட்டணம் குறைவு. இதனால் தமிழகத்தில் பகல் நேரரயில்கள் அதிக அளவில் அறிவித்து இயக்கினால் தமிழக பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x