Published : 01 Oct 2015 07:41 PM
Last Updated : 01 Oct 2015 07:41 PM

சத்தியமங்கலம், கோபி தாலுகாவில் 30,000 ஏக்கர் பாசன நிலம் நிபந்தனை பட்டாவாக மாற்றம்: விவசாயிகள் அதிர்ச்சி

சத்தியமங்கலம், கோபி தாலுகாவில் உள்ள 30 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களை நிபந்தனை பட்டா நிலங்களாக வருவாய்துறை அறிவித்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்ட வருவாய்துறை ஆவணங்கள் அனைத்தும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் கணினி மயமாக்கப்பட்டன. அப்போது சத்தியமங்கலம் மற்றும் கோபி தாலுகா வைச் சேர்ந்த 30 ஆயிரம் ஏக்கர் நிலம் நிபந்தனை பட்டாக்களாக பதி வேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, இந்த நிலங்களுக்கு ‘பி’ (புராஜ்க்ட்) என்ற குறியீடு செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய மாக தாங்களுக்கு சொந்தமான நிலம் திடீரென நிபந்தனை பட்டாவாக மாற்றம் செய்யப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த மாற்றம் காரணமாக இந்த நிலத்தை விற்றால் பட்டா மாறுதல் செய்ய முடியாது. வங்கி கடன் மற்றும் மின்இணைப்பு பெற முடியாது என்பது போன்ற நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனசபை தலைவர் சுபி.தளபதி கூறியதாவது:

ஆங்கிலேயர் ஆட்சியின்போது (1890) அப்பர்பவானி பகுதியில் அணை கட்ட திட்டம் தீட்டப் பட்டுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த அணையில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு நீர் எடுத்து வரும் கால்வாய் கரைகளை பலப்படுத்த, குறிப்பிட்ட விவசாய நிலங்களில் இருந்து மண் எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த நிலப்பகுதிகளில், திட்டப் பணியை குறிக்கும் வகையில், ‘பி’ என குறியீடு செய்துள்ளனர். அப்போதைய வருவாய்துறை மூல ஆவணங்களில் இந்த குறியீடு செய்யப்பட்டது குறித்து விவசாயிகளுக்கோ, மாவட்ட அளவிலான வருவாய் அதிகாரி களுக்கோ எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.எவ்வித நிதியும் ஒதுக்காமல் நாளடைவில் இத்திட்டத்தை ஆங்கிலேயர்கள் கைவிட்டு விட்டனர். ஆனால், திட்டப் பணிகளை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட நிலங்களின் மீது விதிப்பட்டநிபந்தனை குறியீடு மாற்றப்படவில்லை.

வருவாய்துறை ஆவணங்கள் கணினிமயக்கப்பட்ட போது, இந்த குறியீடு அப்படியே பதிவேற்றம் செய்யப்பட்டதால், தற்போது, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குறியீட்டின் பின்னணி குறித்து எவ்விதஆவணங்களும் வருவாய் துறையிடமோ, பொதுப்பணித்துறை யினரிடமோ இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.பாரமபரியமாக நிலத்தின் மீது தங்களுக்கு உள்ள உரிமையை பறிக்கும் இந்த ‘பி’ நிபந்தனை எதற்காக விதிக்கப்பட்டது? எப்போது விதிக்கப்பட்டது? என்ற கேள்விகளுக்கு விடை தேடி வருவாய்துறை, பொதுப்பணித்துறை அமைச்சர்கள், செயலர்கள் அளவில் தொடங்கி உள்ளூர் அதிகாரிகள் வரை சென்றும் இதுவரை விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதில், தங்களது நிலத்துக்கான அரசு வழிகாட்டி மதிப்பை செலுத்தி தங்கள் பெயருக்கு நிலப்பட்டா பெறலாம் என்று வருவாய்துறையினர் கொடுத்த யோசனையால் அதிர்ச்சியின் உச்சத்துக்கு விவசாயிகள் சென்றுள்ளனர்.

இப்பிரச்சினை தொடர்பாக சத்தியமங்கலம் மற்றும் கோபி தாலுகாவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் குழுவினர் இன்று (1-ம் தேதி) ஈரோடு ஆட்சியர் எஸ்.பிரபாகரை சந்தித்து முறையிட திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x