Published : 22 Dec 2020 07:14 PM
Last Updated : 22 Dec 2020 07:14 PM

நிபந்தனைகளுடன் இளையராஜாவை ஸ்டுடியோவுக்குள் அனுமதிக்கத் தயார்: உயர் நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டுடியோ தகவல்

ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி தங்களுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கு மற்றும் குற்ற வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் இளையராஜாவை அனுமதிக்கத் தயார் என பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஒரு அரங்கை கடந்த 40 ஆண்டுகளாக ஒலிப்பதிவுக் கூடமாகப் பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் பிற பணிகளுக்குப் பயன்படுத்த முடிவு செய்தது. இதனால் இளையராஜா ஒலிப்பதிவுக் கூடத்தைக் காலி செய்ய வேண்டும் என பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் வலியுறுத்தியது. இதனையடுத்து, இருதரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "பிரசாத் ஸ்டுடியோவில், திரைப்படங்களுக்காக நான் கைப்பட எழுதிய இசைக் கோர்ப்புகள், இசைக் கருவிகள், எனக்குக் கிடைத்த விருதுகள் உள்ளன. அவற்றை எடுத்துக் கொள்ளவும், தியானம் செய்யவும் அனுமதி வழங்க ஸ்டுடியோ உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் இருதரப்பும் சமரசமாகப் போகும் பட்சத்தில், இளையராஜா, நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் வழக்கறிஞர் ஆணையர், இருதரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் பொருள்களை எடுக்க ஒருநாள் ஸ்டுடியோ வளாகத்துக்குள் அனுமதித்தால் என்ன எனக் கேள்வி எழுப்பி, இது தொடர்பாக இருதரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் இன்று (டிச. 22) விசாரணைக்கு வந்தது.

அப்போது, பிரசாத் ஸ்டுடியோ தரப்பில், "மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி தங்களுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கு மற்றும் குற்ற வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். பிரசாத் ஸ்டுடியோவுக்குச் சொந்தமான நிலத்தை உரிமை கோரக் கூடாது. ஒரு உதவியாளர், ஒரு இசைக்கலைஞர் மற்றும் வழக்கறிஞர் மட்டுமே உடன் வர வேண்டும். இந்த நிபந்தனைகளை ஏற்று தனது கைப்பட இளையராஜா நீதிமன்றத்தில் உத்தரவாத மனுத்தாக்கல் செய்தால் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் நுழைய இசையமைப்பாளர் இளையராஜவை அனுமதிக்கத் தயார்" எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, இளையராஜா தரப்பில் நிபந்தனைகளை ஏற்று, இன்று மாலைக்குள் மனுத்தாக்கல் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x