Last Updated : 22 Dec, 2020 05:13 PM

 

Published : 22 Dec 2020 05:13 PM
Last Updated : 22 Dec 2020 05:13 PM

ஒன்பதரை ஆண்டுகளாக கொள்ளையடித்த பணத்தை வைத்துக்கொண்டு ஜெயித்துவிடலாம் என அதிமுகவினர் எண்ணுகின்றனர்: உதயநிதி விமர்சனம்

ஒன்பதரை ஆண்டுகளாகக் கொள்ளையடித்த பணத்தை வைத்துக்கொண்டு ஜெயித்துவிடலாம் என அதிமுகவினர் எண்ணுகின்றனர் என, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற பிரச்சாரப் பயணத்தைத் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 2-வது நாளாக கடலூர் மாவட்டத்தில் தொடங்கியுள்ளார். இன்று (டிச. 22) கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார்.

இன்று காலை சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு உதயநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

"தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்குத் தயாராகி வருகிறார்கள். வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி அகற்றப்படும். அதிமுகவும் பாஜகவும் ஒரே கட்சிதான். இவை இரண்டும் வெவ்வேறு கட்சிகள் அல்ல. வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் கொள்ளையடித்த பணத்தை வைத்துக்கொண்டு வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என அதிமுகவினர் எண்ணுகின்றனர். அது நடக்காது.

கிராமங்கள்தோறும் மக்களைச் சென்று சந்திக்கும் இயக்கம் திமுக. எப்போதும் மக்களைச் சந்திக்க திமுக பயப்படுவதில்லை. அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 14 நாட்களாகப் போராடி வருகின்றனர். அவர்களது பிரச்சினை குறித்து அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் படித்த அமைச்சர் விஜயபாஸ்கருக்குத் தெரியாதா? மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பிரச்சினையை ஏன் அமைச்சர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கட்டணக் குறைப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும்".

இவ்வாறு உதயநிதி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x