Published : 13 Oct 2015 01:29 PM
Last Updated : 13 Oct 2015 01:29 PM

சாந்தி ரங்கநாதனுக்கு அவ்வையார் விருது: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

டி.டி. ரங்கநாதன் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், டி.டி.கே. மருத்துவமனை மற்றும் சுவாமி தயானந்தா கல்வி மையம் ஆகியவற்றின் கௌரவ செயலாளர் முனைவர் சாந்தி ரங்கநாதனுக்கு 2015-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருதை இன்று தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை கௌரவப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டிலும் இந்தத் துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில், ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு அந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அவ்வையார் விருது வழங்கப்படும்.

மேலும், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி 2012-ஆம் ஆண்டு முதல் அவ்வையார் விருது மகளிர் தினத்தையொட்டி வழங்கப்பட்டு வருகிறது.

முனைவர் சாந்தி ரங்கநாதன், சமூக சேவை நிர்வாகத்தில் முதுகலை பட்டமும், குடிபோதை மீள் சிகிச்சை பற்றிய முனைவர் பட்டமும், குடிபோதை மீள் சிகிச்சை ஆலோசகருக்கான உலக அளவில் அங்கீகார சான்றிதழும் பெற்றுள்ளார்.

மேலும், இவர் சிறந்த சமூக சேவை புரிந்தமைக்காக 1992-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 1999-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் வியன்னா சிவில் சமூக விருதும் பெற்றுள்ளார்.

மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கடந்த 33 ஆண்டுகளாக மறுவாழ்வு அளிக்கும் சேவையினை ஆற்றி வரும் முனைவர் சாந்தி ரங்கநாதனின் மிகச் சிறந்த சமூக சேவையினை பாராட்டி 2015-ஆம் ஆண்டுக்கான அவ்வையார் விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் 6.3.2015 அன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முனைவர் சாந்தி ரங்கநாதனுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் அவ்வையார் விருதுக்கான ஒரு லட்சம் ரூபாய் காசோலை, 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

முனைவர் சாந்தி ரங்கநாதன் தனது சமூக சேவையினை அங்கீகரித்து விருது வழங்கியமைக்காக தனது நன்றியினை முதல்வரிடம் தெரிவித்துக் கொண்டார்'' என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x