Published : 14 Dec 2020 03:14 AM
Last Updated : 14 Dec 2020 03:14 AM

தேர்தலில் 20 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்: கட்சிகளுக்கு தமிழ்நாடு யாதவர் பேரவை வேண்டுகோள்

தமிழ்நாடு யாதவர் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற (வலமிருந்து) பேரவையின் நிறுவனர் காந்தையா, தலைவர் ஜி.ஜி.கண்ணன், உயர்மட்டகுழு தலைவர் வேலுசாமி மற்றும் நிர்வாகிகள் மதுரை சோலைமலை பிச்சை, வசந்தகுமார் ஆகியோர்.

சென்னை

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாதவர் சமுதாயத்தினருக்கு முக்கிய அரசியல் கட்சிகள் 20 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு யாதவர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாடு யாதவர் பேரவையின் 15-வது பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் ஜி.ஜி. கண்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:

தமிழகத்தில் சுமார் 1 கோடி யாதவர் சமுதாய மக்கள் உள்ளனர். அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தது 20 தொகுதிகளை முக்கிய அரசியல் கட்சிகள் ஒதுக்க வேண்டும். நீண்ட காலமாக தனித் தொகுதிகளாக உள்ள தொகுதிகளை சுழற்சி அடிப்படையில் தனித் தொகுதிகளாக மாற்ற வேண்டும்.

மதுரை யாதவர் கல்லூரியை நீதிமன்ற உத்தரவுப்படி யாதவர் கல்வி நிதி அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். மதுரை அல்லது தூத்துக்குடி விமான நிலையத்துக்கு அழகுமுத்துக்கோன் பெயரைச் சூட்ட வேண்டும். ஆரம்பப் பள்ளி பாடங்களில் அழகுமுத்துகோன் வரலாற்றை இடம்பெறச் செய்ய வேண்டும்.

மேய்ச்சல் நிலங்கள், மந்தைவெளி ஒதுக்கீடு நிலங்கள் முறை மாற்றம் செய்யப்படுவது கண்டனத்துக்குரியது. ஏற்கனவே முறை மாற்றம் செய்யப்பட்ட நிலங்களைகண்டறிந்து, அதற்கு இணையான வேறு நிலங்களை ஒதுக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பட்டியலில் உள்ள ஜாதியினருக்கு மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆந்திர மாநில அரசைப் பின்பற்றி தமிழகத்திலும் 'யாதவர் நல மேம்பாட்டு கார்ப்பரேஷன்' அமைக்க வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x