Last Updated : 12 Dec, 2020 03:59 PM

 

Published : 12 Dec 2020 03:59 PM
Last Updated : 12 Dec 2020 03:59 PM

விருதுநகரில் மோட்டார் வாகன ஆய்வாளர்களிடம் ரூ.25 லட்சம் பணம், 100 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

விருதுநகர்

விருதுநகரில் மோட்டார் வாகன ஆய்வாளர்களிடம் கணக்கில் வராத ரூ.25 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 100 பவுன் தங்க நகைகளை லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும் அதே வளாகத்தில் வாகனப் போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகமும் இயங்கி வருகின்றன.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வருபவர்களிடம் அலுவலகத்தில் பணிபுரியும் சிலர் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்நிலையில் விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து வாகன ஆய்வாளர் கலைச்செல்வி, அவரது கணவர் ராஜா மற்றும் மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த், விருதுநகரைச் சேர்ந்த புரோக்கர் ஆல் அருள்பிரசாத் ஆகியோர் ஏராளமான பணத்துடன் மதுரைக்கு காரில் புறப்பட்டுச் செல்வதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து அவர்கள் சென்ற இரு வாகனங்களையும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் துரத்திச் சென்று சத்திரரெட்டியபட்டி செக்போஸ்ட் அருகே மடக்கிப் பிடித்தனர்.

அப்போது அவர்களிடம் கணக்கில் வராத ரூ.25 லட்சம் ரொக்கப் பணமும் 100 பவுன் தங்க நகைகளும் இருந்தது தெரியவந்தது. அதையடுத்து அவர்கள் 4 பேரையும் விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அழைத்து வந்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி கருப்பையா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாகனப் போக்குவரத்து ஆய்வாளர்களிடம் கணக்கில் வராத ரூ.25 லட்சம் ரொக்கமும் 100 பவுன் தங்க நகைகளும் எப்படி வந்தது என்பது குறித்து பிடிபட்ட நபர்களிடம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகரில் இச்சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x