Published : 11 Dec 2020 05:09 PM
Last Updated : 11 Dec 2020 05:09 PM

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டல்

காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டிய முதல்வர் பழனிசாமி.

சென்னை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தென்காசி மாவட்டம், தென்காசி நகரில் 119 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (டிச.11) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழக முதல்வர் 18.7.2019 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தற்போது பெரிய மாவட்டமாக உள்ள திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்து, நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்புக்கிணங்க, மாநிலத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டு, தமிழக முதல்வரால் 22.11.2019 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்திற்கு, தென்காசி நகரில் 28 ஆயிரத்து 995 சதுர மீட்டர் பரப்பளவில், 119 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்படவுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்திற்கு தமிழக முதல்வர் இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

இப்புதிய வளாகத்தில், மாவட்ட வருவாய்த் துறை அலுவலகம், மாவட்டக் கருவூல அலுவலகம், சிறுசேமிப்பு அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம், எல்காட் அலுவலகம், கூட்ட அரங்கு, நில அளவை உதவி இயக்குநர் அலுவலகம், பேரிடர் மேலாண்மைக் கட்டுப்பாட்டு அறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகம், கூட்டுறவுத் துறை அலுவலகம், பதிவுத்துறை அலுவலகம், வேளாண்மைத் துறை அலுவலகம், கால்நடைப் பராமரிப்புத் துறை அலுவலகம், சுகாதாரத் துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை போன்ற துறைகளின் அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x