Last Updated : 10 Dec, 2020 02:06 PM

 

Published : 10 Dec 2020 02:06 PM
Last Updated : 10 Dec 2020 02:06 PM

கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அரசு அறிவித்த ரூ.2 லட்சத்தை வழங்கக் கோரிக்கை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அரசு அறிவித்து இதுவரை வழங்கப்படாத ரூ.2 லட்சத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள், செவிலியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கரோனா காலத்தில் முன்களத்தில் பணியாற்றிவரும் சுகாதாரத் துறையினர், வருவாய், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்குத் தொற்று ஏற்பட்டால் சிகிச்சைக்கான முழுச் செலவையும் அரசு ஏற்றுக்கொள்ளும் எனவும், தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

மேலும், கரோனா வார்டில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஒரு மாத சம்பளம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்தது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கரோனா வார்டில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்களின் சம்பள விவரங்களைச் சேகரித்து மே 14-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படவில்லை. ஒரு மாத சிறப்பு ஊதியமும் வழங்கப்படவில்லை என்று அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, "தமிழகம் முழுவதும் இதுவரை 500க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்று திரும்பியுள்ளனர்.

தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் என்று தெரிந்தே பணிக்குச் செல்கிறோம். பணிக்குச் சென்றுவிட்டு தனிமைப்படுத்திக் கொண்டு, சுழற்சி முறையில் கடந்த 8 மாதங்களாகப் பணியாற்றி வருகிறோம். தொற்று ஏற்பட்டவர்களின் குடும்பங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் பணியால் பலர் மன உளைச்சலில் உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில்தான் இதுவரை அதிகம் பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றி தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அரசு அறிவித்த தொகையை வழங்கினால், அது அவர்களை ஊக்கப்படுத்துவதாக அமையும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x