Last Updated : 10 Dec, 2020 01:31 PM

 

Published : 10 Dec 2020 01:31 PM
Last Updated : 10 Dec 2020 01:31 PM

மத்திய அரசின் திட்டங்களை புதுச்சேரி அரசு இருட்டடிப்பு செய்வதாக பாஜக புகார்

மத்திய அரசின் திட்டங்களை, புதுச்சேரி அரசு இருட்டடிப்பு செய்வதாகக் கூறி காரைக்காலில் பாஜகவினர் இன்று திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் புதுச்சேரி அரசின் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பயிற்சிகள் அளிக்கும் வகையிலான, 'தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா' திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையத்தின் திறப்பு விழா இன்று (டிச.10) காரைக்காலில் நடைபெற்றது.

காரைக்கால் புதிய பேருந்து நிலையக் கட்டிடத்தின் முதல் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி கலந்துகொண்டு, பயிற்சி மையத்தைத் திறந்து வைத்தார்.

இந்நிலையில் விழா அழைப்பிதழ், விழா நடைபெற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் விளம்பரப் பதாகை உள்ளிட்ட எவற்றிலும் பிரதமர் பெயர் குறிப்பிடப்படவில்லை, பிரதமரின் படமும் அச்சிடப்படவில்லை, பயிற்சி மையத்தின் உள்ளேயும் பிரதமர் படம் வைக்கப்படவில்லை என்று கண்டனம் தெரிவித்து, விழா முடிந்த பின்னர் அப்பகுதியில் பாஜகவினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்காலில் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி திறந்து வைத்த வேலைவாய்ப்புக்கான பயிற்சி மையத்தில் பிரதமரின் படத்தை சுவரில் மாட்டிய பாஜகவினர்.

புதுச்சேரி அரசு தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்களை இருட்டடிப்பு செய்து வருவதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து பயிற்சி மையத்தினுள் சென்று பிரதமரின் படத்தைச் சுவரில் மாட்டினர்.

பாஜக மாவட்டத் தலைவர் ஜெ.துரை சேனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளர் எம்.அருள்முருகன், மாவட்டப் பொதுச் செயலாளர்கள் செந்திலதிபன், அப்பு (எ) மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x