Published : 08 Dec 2020 02:40 PM
Last Updated : 08 Dec 2020 02:40 PM

உயரமான கட்டிடங்களில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை: தீயணைப்புத்துறை டிஜிபி ஜாபர் சேட் ஆய்வு

சென்னையில் 104 மீட்டர் உயரம் செல்லும் நவீன மீட்பு மற்றும் தீயணைப்பு வாகனம் மூலம் மிகப்பெரிய கட்டிடங்களில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை தீயணைப்புத்துறை மூலம் நடத்தப்பட்டது. இதை தீயணைப்புத்துறை டிஜிபி ஜாபர் சேட் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உயர்மாடிக் கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல கட்டிடங்களின் உயரமும் வானத்தைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருகிறது.

இந்த உயர்மாடிக் கட்டிங்களில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைப்பதற்கு, கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு அதிநவீன ஊர்திகள் அவசியம் என்பதால் 2016-ம் ஆண்டு அன்றைய முதல்வர் மறைந்த ஜெயலலிதா உத்தரவின் பேரில் ஆசியாவிலேயே முதன் முதலாக 104 மீட்டர் உயரம் கொண்ட ஸ்கை லிஃப்ட் ஏரியல் பிளாட்பார வாகனம் (Bronto Sky Lift, Aerial Platform Vehicle) 2 எண்ணிக்கையிலும், 54 மீட்டர் உயரம் கொண்ட ஸ்கை லிஃப்ட் ஏரியல் பிளாட்பார வாகனம் (Bronto Sky Lift, Aerial Platform Vehicle) 3 எண்ணிக்கையிலும் வாங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

அவற்றில் 104 ஸ்கை லிஃப்ட் ஏரியல் பிளாட்பார வாகனம் (Bronto Sky Lift, Aerial Platform Vehicle) இரண்டு பிராண்டோ ஸ்கை லிஃப்ட் ஊர்திகள் தாம்பரம் மற்றும் ராஜ்பவன் (ஆளுநர் மாளிகை) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களிலும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த ஊர்திகள் பல்வேறு தீ விபத்துகள் மற்றும் மீட்புப் பணி அழைப்புகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் பல்வேறு உயர்மாடிக் கட்டிடங்களில் ஆபத்துக் காலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் உயர் தளத்தில் இருந்து எவ்வாறு மீட்பது என்பது பற்றிய பயிற்சிகளிலும் பயன்பட்டு வருகிறது.

உயரமான மாடிக் கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்துகளைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையால் தொடர்ச்சியாக ஒத்திகைப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக சிறுசேரியில் உள்ள ஒசியானிக் ஹிராநந்தினி (Oceanic of Hiranandini) என்ற மிக உயர்ந்த கட்டிடத்தில், தீ விபத்து மற்றும் மீட்புப் பணி ஒத்திகை பயிற்சி இன்று தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி ஜாபர் சேட் மேற்பார்வையில் நடைபெற்றது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த ஊர்தி தரைதளத்தில் இருந்து நீட்டிப்பு ஏணி மூலம் 104 மீட்டர் உயரம் வரை உள்ள கட்டிடங்களில், மேல்முனையில் இருக்கும் பாதுகாப்புக் கூண்டில் இருந்து இயக்கித் தீயை அணைக்கலாம். இந்த ஊர்தி ஒரே நேரத்தில் நான்கு நபர்களை மீட்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் லாரி மூலமாகவும், கட்டிடத்தில் உள்ள நீர்நிலை சாதனங்கள் மூலமாகவும் இந்த ஊர்தியில் நீர் இணைப்பு ஏற்படுத்தி தீயை அணைக்கலாம். இந்த ஒத்திகைப் பயிற்சி மூலம் எவ்வாறு இந்த ஊர்தியினைக் கொண்டு உயர்மாடிக் கட்டிடங்களில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கலாம் என்பதற்கான செயல்முறை விளக்கம், இதற்கென சிறப்புப் பயிற்சி பெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்குச் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்த செயல்முறைப் பயிற்சியின்போது 8-வது அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து ஆபத்தில் இருந்த கணவன், மனைவி மற்றும் குழந்தைகளை ஸ்கை லிஃப்ட் ஏரியல் பிளாட்பார வாகனம் (Bronto Sky Lift, Aerial Platform Vehicle) மூலம் காப்பாற்றி தரைதளத்திற்கு அழைத்து வந்தார்கள்.

தி.நகர் சென்னை சில்க்ஸ், ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலை, பெரம்பூர் மற்றும் மாதவரம் ரசாயன குடோன் போன்ற தீ விபத்துகளின்போது ஸ்கை லிஃப்ட் ஏரியல் பிளாட்பார வாகனம் (Bronto Sky Lift, Aerial Platform Vehicle) மூலம் விரைந்து தீயணைக்கப்பட்டதால் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி ஜாபர்சேட், இது போன்ற விபத்துகள் ஏற்படும்போது துரிதமாகச் செயல்பட்டு கட்டிடத்தில் உள்ளவர்களைக் காப்பாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார். பயிற்சியில் சிறப்பாகச் செயல்பட்ட பணியாளர்களையும் பாராட்டினார்''.

இவ்வாறு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x