Published : 29 Oct 2015 09:56 AM
Last Updated : 29 Oct 2015 09:56 AM

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: சென்னை இளம்பெண் வித்யாவை ஆசிட் வீசி கொன்றவருக்கு ஆயுள்

காதலிக்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீசி கொன்ற வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் பரமேஸ்வரன் நகரை சேர்ந்தவர் வித்யா(21). பிளஸ் 2 முடித்து விட்டு இணையதள மையத்தில் பணி புரிந்து வந்தார். கிண்டியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்தார். இணையதள மையத்துக்கு அடிக்கடி வந்தவர், வித்யாவை காதலித்துள்ளார்.

பின்னர் வித்யாவிடம் தன்னை காதலிக்குமாறு அவர் வற்புறுத்தி யுள்ளார். ஆனால் இதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விஜயபாஸ்கர் 2013-ம் ஆண்டு வித்யா மீது ஆசீட் வீசினார். இதில், வயிறு மற்றும் கழுத்து, முகம் ஆகிவற்றில் பலத்த காயமடைந்து வித்யா அலறினார். அக்கம்பக்கத்தினர் விஜயபாஸ் கரை பிடித்து போலீஸில் ஒப்படைத் தனர். படுகாயமடைந்த வித்யா சென்னை கீழ்பாக்கம் அரசு மருத் துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக, ஆதம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விஜயபாஸ்கரை கைது செய்தனர்.

இதனிடையே மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த வித்யா 24 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்த போலீஸார், அதை கொலை வழக்காக மாற்றினர்.

இந்த வழக்கு தொடர்பான விசா ரணை, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் நிருபிக்கப்பட்டுள்ளதால் விஜயபாஸ்கருக்கு ஆயுள் தண் டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிப்பதாகவும், அபராத தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாத கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்து நீதிபதி செல்வக்குமார் உத்தரவிட்டார்.

இதுகுறித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் காஞ்சி மாவட்டச் செயலாளர் வி.பிரமீளா கூறும்போது, ‘வித்யாவை ஆசிட் ஊற்றி கொன்ற வழக்கில், குற்றவாளிக்கு தண்டனை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. எனினும், தற்போது ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதை வரவேற்கிறோம். மேலும், வித்யாவின் குடும்பத்தினருக்கு கூடுதலாக அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என மாதர் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x