Last Updated : 07 Dec, 2020 07:53 PM

 

Published : 07 Dec 2020 07:53 PM
Last Updated : 07 Dec 2020 07:53 PM

கோவை சட்டப்பேரவைத் தொகுதிகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட வாக்காளர்கள் விகிதம் அதிகரிப்பு: சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் தீவிரம்

சட்டப்பேரவைத் தொகுதிகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட வாக்காளர்கள் விகிதம் அதிகரித்ததைக் கண்டறிந்து சரிசெய்யும் சுருக்க முறை திருத்தப் பணிகள், மாவட்ட நிர்வாகத்தினரால் தீவிரமாக மேற்கொள்ளபட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த மாதம் 16-ம் தேதி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலின்படி, மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 14 லட்சத்து 68 ஆயிரத்து 222 ஆண் வாக்காளர்கள், 15 லட்சத்து 02 ஆயிரத்து 142 பெண் வாக்காளர்கள், 369 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் என மொத்தம் 29 லட்சத்து 70 ஆயிரத்து 733 வாக்காளர்கள் உள்ளனர்.

இச்சூழலில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்த மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட சதவீதம் பேர் வாக்காளர்களாக இருக்கத் தகுதியுடைவர்கள் என வரையறுக்கப்பட்டு இருக்கும். இந்த வரையறுக்கப்பட்டவர்களில் 75 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் கட்டாயம் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த 75 சதவீதம் என்பது துல்லியமாக இல்லாவிட்டாலும், கூடுதலாக அல்லது குறைவாகவோ சில சதவீதம் இருக்கலாம். அதற்காக அதிக சதவீதம் கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கக்கூடாது. இந்த விகிதாச்சாரத்தை ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலிலும் முறையாக உள்ளதா என்பதைக் கண்டறிய சுருக்க முறைத் திருத்தப் பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதில், பொள்ளாச்சியில் 73.02 சதவீதம், வால்பாறையில் 73.29 சதவீதம், கிணத்துக்கடவில் 76.7 சதவீதம், சிங்காநல்லூரில் 75.64 சதவீதம், கோவை தெற்கில் 75.2 சதவீதம், கோவை வடக்கில் 75.69 சதவீதம், மேட்டுப்பாளையத்தில் 69.92 சதவீதம், கவுண்டம்பாளையத்தில் 83 சதவீதம், தொண்டாமுத்தூரில் 79 சதவீதம், சூலூரில் 77.2 சதவீதம் உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் வேறுபாடுகள் இருந்தாலும், சூலூர்,கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர் தொகுதிகளில் மட்டும் அதிக அளவில் விகிதாச்சார வேறுபாடுகள் உள்ளன.

சுருக்கத் திருத்தப் பணிகளை சரியாக மேற்கொண்டு, மேற்கண்ட விகிதாச்சார வேறுபாடுகளை சரி செய்யுமாறு கோவை மாவட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் மேற்பார்வையாளர் மு.கருணாகரன் அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து இந்த வேறுபாட்டு விகிதாச்சாரத்தைச் சரிசெய்யும் பணியில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்டத் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ''வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்களிலும், இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட விகிதாச்சார வேறுபாட்டுக்கு, உயிரிழந்த வாக்காளர்களின் பெயர்களைச் சரிவர நீக்காமல் இருத்தல், தொகுதி மாறிய வாக்காளர்கள் பழைய தொகுதியில் தங்களது பெயரை நீக்காமல் இருத்தல் போன்றவை காரணமாக இருக்கலாம். இந்த விகிதாச்சார வேறுபாட்டைச் சரிசெய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x