Published : 07 Dec 2020 07:18 PM
Last Updated : 07 Dec 2020 07:18 PM

புதிதாக கட்டப்படும் மருத்துவக் கல்லூரிகளுக்கான விதிகளை அமல்படுத்தக் கோரிய வழக்கு: மத்திய-மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

புதிதாக கட்டப்படும் மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி கட்டப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்குக் குழு அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய-மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 2021- 22ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கத் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.

மத்திய அரசின் 60 சதவீத நிதியுதவியுடன் கட்ட உள்ள இந்த மருத்துவக் கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி கட்டப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்யக் குழு ஒன்றை அமைக்கக் கோரி, திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவரது மனுவில், “தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி, மருத்துவக் கல்லூரிகள் 75 ஆயிரத்து 676 சதுர மீட்டர் பரப்பளவுக்குக் கட்டப்பட வேண்டும். கூட்ட அரங்கு ஆயிரத்து 200 சதுர மீட்டர் பரப்புக்குக் கட்டப்பட வேண்டும். ஆனால், இந்த விதிகளை மீறி திருப்பூர் மருத்துவக் கல்லூரியில் 3 ஆயிரத்து 107 சதுர மீட்டர் பரப்புக்குக் கூட்ட அரங்கு கட்டப்பட்டுள்ளது.

அத்துடன், கட்டுமானப் பணிகளுக்கு பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள், அதிக தொகையைக் குறிப்பிட்டுள்ளனர். ஒரு கல்லூரிக்குக் குறிப்பிட்டுள்ள தொகையைக் கொண்டு இரு கல்லூரிகள் கட்ட முடியும். இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணாகிறது” என மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி இடிந்து விழுந்த விபத்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மருத்துவக் கல்லூரிகள் தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என, அரசுத் தரப்புக்கு அறிவுறுத்தினர்.

மேலும், புதிய மருத்துவக் கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி கட்டப்படுகிறதா? என அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத் துறைச் செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு பிப்ரவரி மாதம் பதிலளிக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கும், தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x