Last Updated : 07 Dec, 2020 06:18 PM

 

Published : 07 Dec 2020 06:18 PM
Last Updated : 07 Dec 2020 06:18 PM

மழைநீர் தேங்கிய சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு அதிகாரி ராஜேஷ் ஆய்வு

சிதம்பரம் நடராஜர் கோயில் மழைநீர் வெளியேறும் கால்வாய்ப் பகுதி உள்ள இடத்தை அதிகாரி ராஜேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன்.

கடலூர்

மழைநீர் தேங்கிய சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு அதிகாரி ராஜேஷ் இன்று ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சிதம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. விளைநிலங்கள் மூழ்கின. சிதம்பரம் நடராஜர் கோயிலில் 4 அடிகளுக்கு மேல் தண்ணீர் தேங்கியது. இதனையடுத்து நகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் தேங்கியிருந்த தண்ணீரை இறைத்து வெளியேற்றினர். தற்போது கோயிலில் சாமி தரிசனம் இயல்பாக நடைபெற்று வருகின்றது.

இதுகுறித்துத் தகவல் அறிந்த மாநில அரசின் சிறப்பு அதிகாரியும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குனருமான ராஜேஷ் ஐஏஎஸ் இன்று (டிச.7) சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்று தண்ணீர் வெளியேறும் பாதைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகமும், பொதுப் பணித்துறை அதிகாரிகளும் இணைந்து சரிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அதேபோல அங்கு கோயில் வளாகத்தில் இருந்த குப்பைகளையும் உடனே வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் சிதம்பரம் அருகே உள்ள ஓமகுளம், நாகேசேரி குளம் உள்ளிட்ட நீர்நிலைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிதம்பரம் அருள்மிகு ஸ்ரீநடராஜபெருமான் ஆலயத்தைப் பார்வையிடும்போது, சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் ஆகியோர் மற்றும் கோயில் பொது தீட்சிதர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x