Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM

ஆஸி.யில் விக்கெட் வீழ்த்திய வீரர் நடராஜனின் சாதனை தொடரட்டும்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

நடராஜன்

சென்னை

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரானகிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி விக்கெட் வீழ்த்திய தமிழக வீரர் நடராஜனுக்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு அணிக்கு எதிராக 3 ஒருநாள் தொடர் உள்ளிட்ட போட்டிகளில் விளையாடுகிறது. இதில் 3-வது ஒருநாள் போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, சேலத்தை சேர்ந்த தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டார். சர்வதேச அளவில் முதல் போட்டியில் விளையாடிய நடராஜன் நேற்று 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

அவருக்கு வாழ்த்து தெரிவித்து தலைவர்கள் கூறியிருப்பதாவது:

முதல்வர் பழனிசாமி: இந்தியாவுக்கான தனது முதல் போட்டியிலேயே சவால்கள் நிறைந்த சூழலிலும் முத்திரை பதித்து, தன் சர்வதேச பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ள நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக தனது முதல் வெற்றிப் பயணத்தை தொடங்கியுள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தன் அபார திறமையால் தாய்நாட்டுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கும் அவரது சாதனைப் பயணம் தொடரட்டும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி, ஆஸ்திரேலிய மண்ணில் 2 விக்கெட்களை வீழ்த்தி சர்வதேச போட்டிகளுக்கான விக்கெட் கணக்கை தொடங்கியிருக்கும் தமிழக வீரர் நடராஜனுக்கு வாழ்த்துகள். வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புதுமுக வீரராக களமிறங்கி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்த சேலம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜனுக்கு வாழ்த்துகள். கிரிக்கெட் போட்டிகளில் அவர் புதிய சாதனைகளை படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x