Last Updated : 14 Oct, 2015 08:42 AM

 

Published : 14 Oct 2015 08:42 AM
Last Updated : 14 Oct 2015 08:42 AM

வாக்குச் சாவடி முகவர்கள் கிடைக்காமல் திணறும் அரசியல் கட்சிகள்: அதிமுக, திமுக மட்டுமே பட்டியல் அளித்துள்ளன

அதிமுக, திமுக தவிர மற்ற கட்சிகள் வாக்குச் சாவடி முகவர்களின் பட்டியலை வழங்க முடியாமல் திணறி வருகின்றன.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர் தலை முன்னிட்டு செப்டம்பர் 15-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய அக்டோபர் 24-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் வாக்குச் சாவடி முகவர்களை தேர்வு செய்து அதற்கான பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வழங்க வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் 64 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் உள்ளன. இவை அனைத்துக்கும் முகவர்களை தேர்வு செய்து அதிமுக, திமுக மட்டுமே பட்டியலை அளித்துள்ளன. இந்த இரு கட்சிகளுக்கும் வாக்குச் சாவடி அளவில் கிளை கமிட்டிகள் வலுவாக உள்ளன. அதனால் மிக எளிதாக முகவர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளன.

ஆனால், அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், மாநில கட்சிகளான தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் வாக்குச் சாவடி முகவர்கள் பட்டியலை முழுமையாக வழங்கவில்லை என தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

மொத்தமுள்ள 64 ஆயிரம் வாக்குச் சாவடிகளுக்கும் முகவர் களை நியமிக்க வேண்டும் என்றால் வாக்குச் சாவடி அளவில் கட்சி அமைப்புகள் வலுவாக இருக்க வேண்டும். தமிழகத்தில் அதிமுக, திமுக தவிர மற்ற எந்தக் கட்சிக்கும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கிளைகள் இல்லை. எனவே, வாக்குச் சாவடி முகவர்கள் கிடைக்காமல் மற்ற கட்சிகள் திணறி வருவதாக கூறப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் குழுக்களை அமைக்குமாறு காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் மேலிடம் மாநிலத் தலைமைக்கு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி 64 ஆயிரம் வாக்குச் சாவடிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்திருந்தார். ஆனால், வட சென்னை மாவட் டத்தில் மட்டுமே வாக்குச் சாவடி முகவர்கள் முழுமையாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக முகவர்கள் அனைவருக்கும் மாவட்டத் தலைவர் ராயபுரம் மனோ விருந்து அளித்துள்ளார்.

மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாமக, பாஜக போன்ற கட்சிகள் ஒரு சில மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் வாக்குச் சாவடி முகவர்களின் பட்டியலை முழுமையாக அளிக்கவில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விலைக்கு வாங்கும் ஆபத்து

இது குறித்து காங்கிரஸ், பாஜக தலைவர்களிடம் கேட்டபோது, ‘‘அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் முகவர்கள் கிடைக்காமல் தடுமாறு வது உண்மைதான். தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே முகவர் களின் பட்டியலை அளித்தால் அதிமுக, திமுக போன்ற கட்சிகள் சிறிய கட்சிகளின் முகவர்களை விலைக்கு வாங்கும் ஆபத்து உள்ளது. முகவர்களை எப்போது வேண்டுமா னாலும் மாற்றலாம். என்றாலும் சிறிய கட்சிகளால் நினைத்த நேரத்தில் முகவர்களை மாற்றுவது கடினம். ஆனாலும், முடிந்த அளவுக்கு முகவர்களின் பட்டியலை அளித்து வருகிறோம்’’ என்றனர்.

பெரிய கட்சிகளின் வலையில் சிக்கிவிடுவார்கள் என்பதால் முகவர்கள் பட்டியலை அளிப்பதை சிறிய கட்சிகள் தாமதப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x