Published : 21 Nov 2020 03:17 am

Updated : 21 Nov 2020 11:18 am

 

Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 11:18 AM

போலி சமூக நீதி, சமத்துவம் பேசும் திமுகவை தமிழகத்தில் இருந்து விரட்டுவதே பாஜகவின் நோக்கம்: பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் பேச்சு

the-bjp-s-aim-is-to-drive-the-dmk-out-of-tamil-nadu
ஈரோட்டில் தெய்வீக தமிழ்ச் சங்கத்தின் சார்பில், பொதுமக்களுக்கு ஆன்மிக நூல்களை பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் வழங்கினார். அருகில் பாஜக மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் உட்பட நிர்வாகிகள் உள்ளனர்.

ஈரோடு

போலி சமூக நீதி, சமத்துவம் பேசுகின்ற திமுகவை தமிழகத்தில் இருந்து விரட்டுவதே பாஜகவின் ஒரே நோக்கம் என ஈரோட்டில் நடந்த வேல் யாத்திரை தொடக்க விழாவில் பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் பேசினார்.

ஈரோடு சம்பத் நகரில் வேல்யாத்திரையையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேசியதாவது;


கந்தசஷ்டி கவசத்தை இழிவு படுத்தியவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். அவர்களுக்கு பின்னணியில் உள்ள திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முகமூடியை கிழித்து பொதுமக்களுக்கு காட்டவே இந்த யாத்திரை நடக்கிறது.

நமது தாய்மார்கள் நவராத்திரி விரதம் இருந்து பூஜை செய்யும் நேரத்தில், பெண்களை கேவலமாகப் பேசியவர்களுக்கு ஸ்டாலின் ஆதரவு அளிக்கிறார். அவர்கள் கட்சியில் ஒரு கோடி இந்துக்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்கள் அனைவரும் இப்போது கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர். அதனால்தான், நமது யாத்திரைக்கு வரவேற்பு கூடியுள்ளது.

திமுகவின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான பூங்கோதை, கட்சிக்காரர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கோருகிறார். திமுகவில் பெண்கள் இழிவு படுத்தப்படுகிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம். பூங்கோதை அருணா பாதிக்கப்பட்டதை பாஜக கண்டிக்கிறது. இதற்கு காரணமானவர்களை ஸ்டாலின் கண்டிக்கவில்லை. அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்கு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. அவர்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண் எம்.எல்.ஏ.விற்கே பாதுகாப்பு இல்லை என்றால், நமது சகோதரிகளுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? இவர்கள் ஆட்சிக்கு வந்தால், பெண்கள் சுதந்திரமாக இருக்க முடியாது.

பட்டியலின சகோதரர்களை திமுகவினர் கேவலமாகப் பேசு கின்றனர். இதுதான் அவர்களின் சமூக நீதி. உண்மையான சமூக நீதி, சமத்துவம் பாஜகவிடம்தான் உள்ளது. போலி சமூக நீதி, சமத்துவம் பேசுகின்ற திமுகவை தமிழகத்தில் இருந்து விரட்டுவதே பாஜகவின் ஒரே நோக்கம். தமிழகம் ஆன்மிக பூமி என்பதை வெளிப்படுத்தும் வகையில், அடுத்து வரும் ஆட்சியை பாஜகதான் தீர்மானிக்கும். எத்தனை தடை வந்தாலும் இந்த யாத்திரை டிசம்பர் 7-ம் தேதி திருச்செந்தூர் வரை சென்று சேரும், என்றார்.

பொதுக்கூட்டத்தில் வேல் யாத்திரை ஒருங்கிணைப்பாளரும், பாஜக மாநில துணைத் தலைவருமான நரேந்திரன் பேசியதாவது:

தமிழக அரசை எதிர்த்து நாங்கள் வேல் யாத்திரை நடத்தவில்லை. மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல யாத்திரை நடத்துகிறோம்.

தமிழகத்தில் கோயில்கள் முன்பு கடவுளை நிந்தித்து வைக்கப் பட்டுள்ள கல்வெட்டுகளை, வேல்யாத்திரை முடிவதற்குள், தமிழக அரசு எடுக்க வேண்டும். இதனைச் செய்யாவிட்டால், திராவிடர் கழகத் தலைவர் வீட்டு முன்பும், திமுக தலைவர் வீட்டு முன்பும் அவர்களை விமர்சித்து, ஒரு இந்துவாக, நான் கல்வெட்டுகளை வைக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும், என்றார்.

பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை பேசும்போது,‘திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் உங்கள் கடவுளை, உங்கள் மொழியை, உங்கள் சகோதரிகளை இழிவுபடுத்துகின்றனர். அவர்களைத் தட்டிக்கேட்க நியாயத்திற்கான, தர்மத்திற்கான யாத்திரையை பாஜக நடத்துகிறது. ஈரோட்டிலிருந்து இந்த முறை பாஜக தங்கள் எம்.எல்.ஏ.வை சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்கும்’ என்றார்.

தொடர்ந்து தடையை மீறி வேல்யாத்திரை மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் முருகன், துணைத்தலைவர்கள் கனகசபாபதி, நரேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட 1330 பேரை போலீஸார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.

முன்னதாக, பாலதேவராயரால் கந்த சஷ்டி அரங்கேற்றம் செய்யப்பட்ட சென்னிமலை முருகன் கோயிலில், பாஜக மாநிலத் தலைவர் முருகன் தரிசனம் செய்தார்.


போலி சமூக நீதிசமூக நீதிசமத்துவம்திமுகபாஜகவின் நோக்கம்பாஜகமாநிலத்தலைவர்எல்.முருகன்DmkBjp

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x