Published : 17 Nov 2020 05:44 PM
Last Updated : 17 Nov 2020 05:44 PM

அரசுப் பேருந்துகளில் நாடக, கிராமியக் கலைஞர்கள் வாத்தியக் கருவிகளைக் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்: அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு

அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் நாடகம் மற்றும் கிராமியக் கலைஞர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளைக் கட்டணமின்றி எடுத்துச் செல்ல தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் இன்று (நவ. 17) வெளியிட்ட அறிக்கை:

"நாடகக் கலையையும், அதில் ஈடுபட்டுள்ள நாடகக் கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நாடகக் கலைஞர்கள் தங்களது கலைத்திறமைகளை வெளிப்படுத்தி, நிகழ்ச்சிகளை நடத்திட பிற இடங்களுக்கு ரயில், அரசுப் பேருந்துகளில் கட்டணச் சலுகையுடன் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாடகக் கலைஞர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பயணம் மேற்கொள்ளும்போது கொண்டு செல்லும் இசைக்கருவிகள்/ கலைப் பொருள்களை இலவசமாகப் பேருந்துகளில் கொண்டு செல்ல பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்து வருகின்றனர் என நாடகக் கலைஞர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதனைக் கருத்தில் கொண்டு, நாடகக் கலைஞர்கள் தங்களது நாடகக் கலைத் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பிற இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது, பேருந்துகளில் தங்களது கலைப்பொருட்கள்/ இசைக் கருவிகளை இலவசமாகக் கொண்டு செல்ல அனுமதிக்க ஆவன செய்யுமாறு போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் தரப்பட்டது.

அதனடிப்படையில், கடந்த போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கையின்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டார்.

'அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் நாடகம் மற்றும் கிராமியக் கலைஞர்களுக்கு ஏற்கெனவே 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கலைஞர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளை அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்'.

மேற்குறிப்பிட்டுள்ள போக்குவரத்துத் துறை அமைச்சரின் அறிவிப்பினைச் செயல்படுத்தும் பொருட்டு, நாடகக் கலைஞர்களுக்கு மட்டும் கீழ்க்காணும் உபகரணங்களை பேருந்துகளில் கட்டணமில்லாமல் இலவசமாக எடுத்துச்செல்ல அனுமதிக்கும்படி அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு அறிவுறுத்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

நாடகக் கலைஞர்களுக்கான கலைப்பொருள்கள்/ இசைக்கருவிகள்

1. ஆடை, அணிகலன்கள்

2. ஒப்பனைப் பொருள்கள்

3. இசை வாத்தியக் கருவிகள்

4. ஆர்மோனியம்

5. தபேலா

6. டோலக்

7. மிருதங்கம் மற்றும்

8. இதர ஏதேனும் சிறிய அளவிலான இசைக்கருவிகள்

கலை பண்பாட்டுத் துறையின் ஓர் அங்கமான இயல், இசை, நாடக மன்றத்தின் வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களை நாடக, கிராமியக் கலைஞர்களுக்குச் செய்து வரும் தமிழக அரசு, அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில், எதிர்வரும் காலங்களில் பல்வேறு திட்டங்களை தீட்டி, செயல்படுத்தும்".

இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x