Published : 07 Nov 2020 06:38 PM
Last Updated : 07 Nov 2020 06:38 PM

முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை அனுமதிக்கக் கூடாது: தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்குப் பின் காவல் ஆணையர் பேட்டி

தமிழக அரசு அறிவித்த 2 மணி நேரம் தவிர்த்து பட்டாசுகள் வெடிப்பவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் தீவிரமாக எடுத்து வருகின்றனர். சென்னையில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் கால ஷாப்பிங் என்றால் பிரதான இடம் தி.நகர் ஆகும். ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகை ஷாப்பிங் ஒரு மாதம் முன்னரே களைகட்டிவிடும். ஆனால், இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக 6 மாதகாலம் அனைத்தும் முடங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ஊரடங்கின் கடைசி 2 மாதங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தீபாவளி ஷாப்பிங்கும் தாமதமாக மந்த நிலையிலேயே தொடங்கியது. பொதுமக்கள் வருகை குறைவாக உள்ளது. வாங்கும் சக்தி குறைந்துள்ளதால் பெரும்பாலானோர் ஆர்வமின்றி உள்ளனர்.

இந்நிலையில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள் போனஸ் வழங்கியுள்ளதாலும், மாதத்தின் முதல் வாரம் என்பதாலும் தீபாவளிப் பண்டிகை ஷாப்பிங் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தி.நகரில் ஷாப்பிங் வரும் பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு சென்னை காவல்துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. சென்னை தி.நகரில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது கண்காணிப்பு கேமரா மையம், சேவை மையங்கள் உள்ளிட்டவற்றைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் காவல் ஆணையர் கூறியதாவது:

“தி.நகர் மார்க்கெட் பகுதிகளில் ஏற்கெனவே உள்ள 200 கண்காணிப்பு கேமராக்களுடன் கூடுதலாக 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் 2 ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு செய்யப்படும். கரோனா காலம் என்பதால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 10 விழிப்புணர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்றைத் தடுக்க ஷாப்பிங் வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் உறுதி செய்ய ஒவ்வொரு கடை வியாபாரிக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களைக் கடைக்குள் அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் கூட்ட நெரிசல் அதிகம் என்பதால் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கூடுதலாக 500 போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

இதைத்தவிர, கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் காவல்துறையினர் கூடுதலாகக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் அருகாமையில் உள்ள பள்ளிகளில் பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வாகனங்களில் வரும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க, குறிப்பிட்ட தொலைவில் வாகனங்களை நிறுத்திவிட்டு, கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் நடந்து செல்ல அறிவுறுத்தப்படுவர்.

தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதில் உள்ள விதிமுறைகள் குறித்து, கடந்த ஆண்டே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனினும், இது கரோனா காலம் என்பதால் தமிழக அரசு அறிவித்த காலை 1 மணி நேரம், மாலை 1 மணி நேரம் தவிர்த்து பட்டாசுகள் வெடிப்பவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”.

இவ்வாறு சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x