Published : 05 Nov 2020 07:54 PM
Last Updated : 05 Nov 2020 07:54 PM

அனைவருக்கும் துரோகம் செய்யும் முதல்வராக பழனிசாமி ஆகிவிட்டார்: ஸ்டாலின் விமர்சனம்

சென்னை

விவசாயிகளுக்குத் துரோகம், நெசவாளர்களுக்குத் துரோகம், வியாபாரிகளுக்குத் துரோகம், மீனவர்களுக்குத் துரோகம், பிற்படுத்தப்பட்டோருக்குத் துரோகம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குத் துரோகம், பட்டியலின மக்களுக்குத் துரோகம், சிறுபான்மையினருக்குத் துரோகம் என்று அனைவருக்கும் துரோக முதல்வராக பழனிசாமி ஆகிவிட்டார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் இன்று நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாக ஸ்டாலின் பேசியதாவது:

“தூத்துக்குடி மாவட்டத்துக்கு அதிமுக ஆட்சியின் சாதனைகள் என்றால் எதைச் சொல்வது? ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைக் கொலை செய்ததைச் சொல்வதா? சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற தந்தையையும் மகனையும் அடித்தே கொன்ற அநியாயத்தைச் சொல்வதா?

சொத்தன்குடியிருப்பு செல்வன் கொலை வழக்கு என்பது ஆளும்கட்சிப் பிரமுகரும் போலீஸும் சேர்ந்து செய்த கொலை என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. நான் அறிக்கை வெளியிட்ட பிறகு அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த அராஜகத்தைச் சொல்வதா? எதைச் சொல்வது?

நச்சு ஆலையாக மாறிவிட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி வழியில் போராடினார்கள் மக்கள். கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து தங்களது கோரிக்கை மனுவைத் தருவதற்காக ஊர்வலமாக வந்த மக்கள் மீது எடப்பாடி பழனிசாமி அரசு திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியது.

அன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அலுவலகத்தில் இருந்து மனுவை வாங்கி இருந்தால் பிரச்சினையே இல்லை. அவரை வேண்டுமென்றே வெளியூருக்குப் போக வைத்துவிட்டு, தூத்துக்குடி மக்களைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியது அதிமுக அரசாங்கம்.

குடும்பம் குடும்பமாக பிள்ளை குட்டிகளுடன் வந்தவர்களைச் சுட்டுப் பொசுக்கினார்கள். மக்களைச் சுடுவதற்காகவே ஊருக்குள் வர வைத்து சுட்டுக் கொன்றார்கள். கலைந்து ஓடியவர்களைச் சுட்டுள்ளார்கள். வீட்டுக்குச் சென்றுவிட்டவர்களை தேடிப் பிடித்துச் சுட்டுள்ளார்கள். விரட்டி விரட்டிச் சென்று சுட்டுள்ளார்கள். சொந்த நாட்டு மக்கள் மீது இப்படி கொலைவெறித் தாக்குதல் நடத்திய அரசாங்கத்தை மக்கள் அரசாங்கம் என்று சொல்ல முடியுமா?

ஒரு கூலிப்படையைப் போல எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கம் அன்று செயல்பட்டுள்ளது. 13 பேரைக் கொலை செய்த கூட்டத்துக்கு நீங்கள் பாடம் கற்பிக்க வேண்டாமா? இவர்களைக் கொன்று விட்டார்கள் என்று கேள்விப்பட்டதும் உடனடியாக தூத்துக்குடிக்கு வந்தேன். எனது வாழ்க்கையில் இதுவரை நான் பார்த்திராத கலவர பூமியாக அன்றைய தூத்துக்குடி இருந்தது.

இதற்கு யார் காரணம்? முதல்வர் எடப்பாடி பழனிசாமிதானே காரணம்? வந்தாரா முதல்வர் எடப்பாடி? ஏன் வரவில்லை? என்ன பயம்? தூத்துக்குடிக்கு வர முடியாமல் பழனிசாமியை எது தடுத்தது?

ஆனால் என்ன சொன்னார் பழனிசாமி? நான் டி.வி.யைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். இப்படி துப்பாக்கிச் சூடு நடந்ததே எனக்குத் தெரியாது என்று முதல்வர் சொன்னார். உள்துறையைக் கையில் வைத்துக் கொண்டு, எனக்கு இது தெரியாது என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?

அவருக்குத் தெரியும். 13 பேர் கொல்லப்பட்டதும் தெரியாது என்று நாடகம் ஆடுகிறார். இந்தத் துப்பாக்கிச் சூடு முதல்வருக்குத் தெரியாமல் நடந்திருக்காது என்பதற்கு இரண்டு உதாரணங்களைச் சொல்கிறேன்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இன்று வரை அதன் அறிக்கை வெளியாகவில்லை. 30 மாதங்களாக அந்த அறிக்கை ஏன் வெளியே வரவில்லை? உண்மையான குற்றவாளிகள் யார் என்று வெளியில் தெரிந்துவிடும் என்பதற்காக ஆணையம் அப்படியே முடங்கிக் கிடக்கிறது. இது ஒன்று.

மக்கள் மத்தியில் ஏற்பட்ட கோபத்தைத் தணிப்பதற்காக ஒரு அறிவிப்பை முதல்வர் செய்தார். படுகொலை செய்யப்பட்டவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று சொன்னார். அதையாவது முறையாகக் கொடுத்தார்களா என்றால் இல்லை.

வளர்மதி எம்.இ. படித்துள்ளார். சீதா எம்.எஸ்சி., பி.எட். படித்துள்ளார். பானுப்ரியா பி.காம், எம்.பி.ஏ படித்துள்ளார். அனுஷ்யா பி.ஏ. படித்துள்ளார். இப்படிப் பட்டம் பெற்றவர்களுக்கும் கிராம உதவியாளர் பணி தரப்பட்டுள்ளது. 5 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் கிராம உதவியாளர் பணி தரப்பட்டுள்ளது. இது என்ன அளவுகோல்?

எங்களது கல்வித்தகுதிக்கு ஏற்ற வேலையைத் தாருங்கள் என்று அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதுவரை இந்த அரசாங்கம் அதுபற்றிப் பரிசீலனை செய்ததா? வழங்குவதற்கு மனம் இருந்ததா? எதற்காக அப்பாவி மக்களை ஏமாற்றுகிறீர்கள்? அந்தோணி செல்வராஜ் குடும்பத்துக்கும் சண்முகம் குடும்பத்துக்கும் இன்னும் பணி வழங்கப்படவில்லை.

கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு பணிகள் வழங்கக் கோரி பத்து முறைக்கு மேல் மாவட்ட ஆட்சியரிடம் இந்தக் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தும் இரண்டு ஆண்டுகளாகத் தரவில்லை.13 பேரைக் கொன்று குவித்த அரசு, அவர்களது குடும்பத்தினரை நித்தமும் சித்ரவதை செய்து வருகிறது எடப்பாடி அரசு.

சாத்தான்குளம் கொடூரத்தை நான் உங்களுக்கு விரிவாகச் சொல்லத் தேவையில்லை. ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற தந்தை மகனை அடித்தே கொன்றுள்ளது சாத்தான்குளம் போலீஸ். இவர்களது உடலை வாங்க மாட்டோம் என்று கோவில்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தபோதே நான் அறிக்கை வெளியிட்டேன்.

இதற்குக் காரணமானவர்கள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றேன். ஆனால் ஜெயராஜும் பென்னிக்ஸும் உடல்நலக் குறைவு காரணமாகத்தான் மரணம் அடைந்தார்கள் என்று அறிக்கை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இதை விட அப்பட்டமான பொய் இருக்க முடியாது. அனைத்து ஆவணங்களையும் மறைக்க முயன்றார்கள். தொடர்ச்சியாக அறிக்கை வெளியிட்டு சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிடும் அளவுக்கு நெருக்கடியை நான் ஏற்படுத்தினேன். அதனால்தான் இன்று சிபிஐ விசாரணையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு உள்ளது.

ஜெயராஜ் முதலில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். ஏன் அவரை இப்படி அடிக்கிறீர்கள் என்று கேட்ட பென்னிக்ஸ், அரை நிர்வாணமாக ஆக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தமும், நீரிழிவு நோயும் தனக்கு இருக்கிறது என்று சொன்ன பிறகும் ஜெயராஜை விடாமல் அடித்துள்ளார்கள். பென்னிக்ஸுக்கு, 'போலீஸ் என்றால் யார் என்று காட்டு' என்று உத்தரவு போட்டு அடித்துள்ளார்கள். இவற்றை வாக்கு மூலங்களாகப் பதிவு செய்துள்ளது சிபிஐ.

இதில் மிக முக்கியமானது சாத்தான்குளம் காவல் நிலைய ஏட்டு ரேவதியின் வாக்குமூலம் ஆகும். ஜெயராஜும் பென்னிக்ஸும் தாக்கப்பட்டதற்கு நேரடி சாட்சியே இந்த ரேவதிதான். அவர் அனைத்தையும் மறைக்காமல் சொல்லி இருக்கிறார். ''சாத்தான்குளம் காவல் நிலையச் சுவரில் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. அந்த ரத்த மாதிரியும் ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆடையில் இருந்த ரத்தக்கறையும் பொருந்தி உள்ளது.

பென்னிக்ஸ் பயன்படுத்திய ஆடைகள், காவல் நிலையச் சுவர் மற்றும் இதர இடங்களில் சேகரித்த ரத்தக்கறை மாதிரிகள், அவருடைய தாயார் செல்வராணியின் ரத்த மாதிரியுடன் ஒத்துப் போகிறது. இதன் மூலம் இவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டே இறந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்படுகிறது" என்று தனது சிபிஐ கூறியுள்ளது. மொத்தம் 18 இடங்களில் இவர்கள் இருவருக்கும் காயம் இருந்ததாக சிபிஐ கூறியுள்ளது.

இதுதான் இந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் லட்சணம். இருவரை அடித்தே கொல்கிறது போலீஸ். அதற்குத் தலையாட்டுகிறது அரசு மருத்துவமனை. உடல்நலக் குறைவால் இறந்தார்கள் என்று மொத்தத்தையும் மறைக்கிறார் முதல்வர். இத்தகைய பழனிசாமி முதல்வராக நீடிக்கலாமா?

இதனால்தான் தூத்துக்குடிக்கே வரத் தயங்குகிறார் முதல்வர் என்றும் செய்தி வெளியாகி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி வருவதாக இருந்தது. ஆனால் ராமநாதபுரம் மாவட்டம் வரை வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டம் வரவில்லை.

அக்டோபர் 13 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் வருகை தருவார் எனத் தெரிவிக்கப்பட்டது ஆனால் அவர் தாயார் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அக்டோபர் 29 ஆம் தேதி முதல்வர் தூத்துக்குடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதுவும் ரத்து செய்யப்பட்டது.

அடுத்து புதிய தேதி குறித்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஏன் தூத்துக்குடிக்கு முதல்வரால் வரமுடியவில்லை? என்ன தயக்கம்? 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டபோது அந்தக் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல முதல்வர் வரவில்லை.

நூற்றுக்கணக்கானவர்கள் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களைச் சந்திக்க வரவில்லை. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லவும் தூத்துக்குடி வரவில்லை. இப்போதும் மூன்றாவது முறையாக அவரால் வர முடியவில்லை, தள்ளிப் போடுகிறார் என்றால் என்ன காரணம்?

மக்களைப் பார்க்க பயமா? தமிழ்நாடின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளுக்காக மக்கள் போராட்டங்களை நடத்தி வந்தார்கள். எங்காவது சென்று அவர்களது கோரிக்கை என்ன என்று கேட்டிருப்பாரா? எட்டுவழிச் சாலைத் திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று போராடினார்களே தருமபுரி, சேலம் மக்கள். அவர்களைப் போய்ப் பார்த்தாரா?

ஹைட்ரோகார்பன் திட்டங்களால் நிலத்தையும் நிலத்தின் வளத்தையும் இழக்கும் டெல்டா மாவட்டத்து மக்களைப் பார்த்தாரா? காவிரி நீருக்காகப் போராடிய தஞ்சை மாவட்டத்து மக்களை வந்து பார்த்தாரா? காவிரிக்காக பிரதமரைப் போய் பார்த்தாரா? 7.5% சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில், பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் இவர், அரசியல் ரீதியாக என்ன அழுத்தம் கொடுத்தார்?

என்ன பயம்? மக்களைப் பார்ப்பதில் எதற்காக பயம்? பிரதமரைப் பார்ப்பதில் பயம் எதற்காக? ஆளுநருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுப்பதில் என்ன பயம்? மடியில் கனம்! அதனால் வழியில் பயம்!

ஊழல்! அது ஒன்றுதான் எடப்பாடி பழனிசாமியின் ஒரே தொழில். அதைத் தவிர வேறு தொழில் தெரியாது. அவரது ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட ஊழல்கள், முறைகேடுகள், லஞ்ச லாவண்யங்கள் இவை அனைத்துக்குமான முழுமையான பட்டியலை மத்திய பாஜக அரசு எடுத்து வைத்துள்ளது. அதனால்தான் மத்திய அரசு சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி.

டெல்லி கேட்கிற கப்பத்தைக் கட்டுகிறார். அதனால் பாஜக இவரைப் பாதுகாக்கிறது. பழனிசாமியின் ஊழல்களை பாஜக திரட்டி வைத்திருப்பது என்பது அவர்கள் ஏதோ நேர்மையைக் காப்பாற்றுவதற்காக அல்ல. இந்தக் கோப்புகளைக் காட்டி பழனிசாமியை மிரட்டுவதற்காகத் திரட்டி வைத்துள்ளார்கள். எனவே, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அனைவருக்கும் துரோகம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி.

விவசாயிகளுக்குத் துரோகம், நெசவாளர்களுக்குத் துரோகம், வியாபாரிகளுக்குத் துரோகம், மீனவர்களுக்குத் துரோகம், பிற்படுத்தப்பட்டோருக்குத் துரோகம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குத் துரோகம், பட்டியலின மக்களுக்குத் துரோகம், சிறுபான்மையினருக்குத் துரோகம் என்று அனைவருக்கும் துரோக முதல்வராக பழனிசாமி ஆகிவிட்டார்.

இந்தத் துரோகக் கூட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான போர்தான் இந்தத் தேர்தல். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வென்றோம். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் எடுத்து வைக்கும் வாதங்களைப் பார்த்திருப்பீர்கள்.

ஜனநாயகத்துக்காக, மனித உரிமைகளைக் காப்பதற்காக, மாநில சுயாட்சிக்காக, தமிழுக்காக, சமூக நீதிக்காக அவர்கள் நித்தமும் போராடி வருகிறார்கள். தமிழகத்துக்காக மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்காகவும் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருகிறார்கள். இது யாரால் சாத்தியமானது என்றால் தமிழ்நாட்டு மக்களால் சாத்தியமானது.

ஒரு சில எம்.பி.க்களை அல்ல, ஒட்டுமொத்த எம்.பி.க்களையும் திமுக கூட்டணிக்குக் கொடுத்ததால்தான் நம்முடைய தமிழகமே எழுந்து நின்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க முடிகிறது.

அதைப் போலத்தான் ஒட்டுமொத்தமான, முழுமையான வெற்றியை திமுக கூட்டணிக்கு வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி பொதுக்கூட்டத்தின் வாயிலாக தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

முழு வெற்றியை அடையும் போதுதான் முழு நன்மையும் மக்கள் பெற முடியும். மறைந்த தலைவர் கருணாநிதி தேர்தல் நேரத்தில் ஒரு ஊரின் பெயரைக் குறிப்பிடுவார்கள். அந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில்தான் இருக்கிறது. அந்த ஊரின் பெயர், எப்போதும் வென்றான் என்பதாகும்.

தனது வாழ்நாளில் போட்டியிட்ட தேர்தலில் எல்லாம் எப்போதும் வென்றவர் தலைவர். அத்தகைய எப்போதும் வென்றான்களாக திமுக உடன்பிறப்புகள் அனைவரும் மாறவேண்டும். உங்களது கண்ணுக்குத் தெரிய வேண்டியது உதயசூரியன். அது ஒன்றே கட்சித் தொண்டர்களில் லட்சியமாக மாறுமானால், திமுக தொண்டர்கள் அனைவரும் எப்போதும் வென்றான்கள்தான்.

நம்முடைய தலைவர் கருணாநிதி எல்லாவற்றிலும் நிறைவாழ்க்கை வாழ்ந்தவர். அவர் அடைந்த உயரத்தை இதுவரை எவரும் தொட்டதும் இல்லை. இனித் தொடவும் முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். எந்தத் துறையை எடுத்தாலும் அவரே நம்பர் ஒன்னாக இருந்தார்.

எந்தக் கூட்டத்திலும் அவரே முதல் மனிதர். அத்தகைய தலைவருக்கு ஒரு குறை இருந்தது. அவர் நம்மை விட்டுப் பிரியும் போது அவர் முதல்வராக இல்லை. திமுக ஆட்சி மலர்ந்துவிட வேண்டும், அந்த வெற்றியை அவர் பார்த்துவிட வேண்டும் என்று நாம் நினைத்தோம். ஆனால் காலம் வேறு மாதிரியாக நினைத்துவிட்டது.

இயற்கையின் சதியை யாரும் எதுவும் செய்ய முடியாது. ஆனால், கருணாநிதிக்கு நான் கொடுத்த வாக்குறுதியாக திமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும். இது ஒரு இலக்கு. தமிழகத்தை மீட்க வேண்டும். இது இரண்டாவது இலக்கு”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x