Published : 05 Nov 2020 06:25 PM
Last Updated : 05 Nov 2020 06:25 PM

மனுஸ்மிருதி குறித்த விமர்சனம் தேவையற்றது: கமல் பேட்டி

தமிழகத்தில் வேல் யாத்திரையை விட வேலையை எப்படி வாங்கித் தருவது என்பதுதான் முக்கியமானது. இந்த வேலை யார் வேண்டுமானாலும் கையில் எடுக்கலாம். வேலையை வாங்கித் தருவது என்பது பெரிய பொறுப்பு. வேல் யாத்திரை தடையை வரவேற்கிறேன் என்று கமல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மனுஸ்மிருதி நூலில் உள்ள பெண்களின் நிலை குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசியதற்குப் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. திருமாவளவன் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. மனு நூலில் உள்ளதைத்தான் நான் குறிப்பிட்டேன் என திருமாவளவன் பதிலளித்தார்.

இந்தப் பிரச்சினை குறித்து கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. புழக்கத்தில் இல்லாத நூலைப் பற்றி ஏன் பேச வேண்டும் என்று அவர் பதில் அளித்தார்.

தி.நகரில் கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் கமல்ஹாசன் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்தார்.

தமிழகத்தில் மிக முக்கியமான விஷயமாக எதை நினைக்கிறீர்கள்?

ஆதாரத் தேவைகள். மக்களுக்குக் கிடைக்க வேண்டியதே கிடைக்காமல் இருக்கும்போது அதுதான் முதல் தேவை. பல ஊர்களில் 8 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது எனும் நிலை எவ்வளவு கேவலமான நிலை. பொங்கலுக்கு மக்களுக்குப் பணம் தருகிறீர்கள். தேர்தல் நேரத்தில் பணம் தருகிறீர்கள். ஆனால் 6,7 மாதமாக கோவிட் தொற்று நேரத்தில் ஏன் உரிய பணம் தரவில்லை?

மழைநீர் வடிகாலுக்குக் கோடிக்கணக்கான பணம் ஒதுக்குகிறீர்கள். ஆனால், 2 நாள் மழைக்கே தெப்பக்குளமாகிவிடுகிறது சென்னை. இதில் எல்லாம் அடிப்படை மாற்றங்கள் செய்ய வேண்டும். வேலைக்காக அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் நிலையும் உள்ளது. இதையெல்லாம் மாற்ற வேண்டும். விரைவில் தேர்தல் அறிக்கையில் அது வரும்.

ஏழு பேர் விடுதலை குறித்த நிலை என்ன?

அது சட்டம் எடுக்கவேண்டிய முடிவு. நான் எதுவும் சொல்ல முடியாது.

அவர்கள் விடுதலை தாமதம் ஆகிறதே. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தாமதமாகத்தான் பார்க்கிறேன். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி.

தமிழகத்தில் இரண்டு முக்கிய விஷயங்கள் பரபரப்பாக உள்ளன. மனுஸ்மிருதி பிரச்சினை, வேல் யாத்திரை. இதுகுறித்து உங்கள் பதில்?

மனுஸ்மிருதி புழக்கத்தில் இல்லாத புத்தகம். அதுகுறித்த விமர்சனம் தேவையற்றது. நீங்கள் ஐபிசி பற்றி கேளுங்கள். இந்தியச் சட்ட அமைப்பின் மீது யாராவது கை வைப்பதாக இருந்தால் போராட்டம் வெடிக்கும். இதைப் பற்றிப் பேசவேண்டிய அவசியமே இல்லை. அது புழக்கத்தில் இல்லாத புத்தகம்.

அது கலாச்சாரம் சம்பந்தப்பட்டதாக உள்ளது எனச் சொல்கிறார்களே?

கலாச்சாரத்தில் எத்தனையோ உள்ளன. உடன்கட்டை ஏறுவதும் கலாச்சாரத்தில் இருந்ததுதான். அது கூடாது என்பதுதான் என் நிலை. அதைக் கலாச்சாரத்தின் பெயரால் செய்யக்கூடாது. எத்தகைய சோகம் வந்தாலும் அது நடக்கக்கூடாது என்பதே என் நிலை. அப்படி மாறி மாறி வருவதுதான் கலாச்சாரம். பழையதைக் காத்து வைப்பதல்ல கலாச்சாரம். காலத்திற்கு ஏற்ப, தேவைக்கேற்ப நமது கலாச்சாரத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் அந்தக் கலாச்சாரம் மாறும்போது நம் தரம் எவ்விதத்திலும் குறைந்து விடக்கூடாது.

வேல் யாத்திரை குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?

என்னுடைய ஆர்வம் எல்லாம், வேலையை எப்படி வாங்கித் தருவது என்பதுதான். இந்த வேலை யார் வேண்டுமானாலும் கையில் எடுக்கலாம். அந்த வேலையை வாங்கித் தருவது என்பது பெரிய பொறுப்பு. தமிழகத்திற்கு நாம் செய்யும் முதல் கடமை. அதனால், அந்த வேல் யாத்திரையைத் தடை செய்தது நல்லது. சட்டம்- ஒழுங்கு காக்கப்பட்டது என்று நன்றி சொல்லலாம்.

பாஜக மீது மென்மையான விமர்சனம், திமுக மீது கடுமையான விமர்சனம்? நீங்கள் பாஜகவின் பி டீமா?

நான் எப்போது ஏ டீமாகத்தான் இருந்திருக்கிறேன். திரையுலகில் எனக்கு வாய்த்த குருநாதர்கள் அப்படி. பலரும் அப்படிக் குற்றச்சாட்டுகள் வைப்பார்கள். நான் அதற்கு எப்படிப் பதில் சொல்ல முடியும். இப்போது தமிழகத்தைப் பற்றிப் பேசும்போது ஏன் தலைநகரத்தை ஆளும் கட்சி பற்றிக் கேட்கிறீர்கள்.

தமிழகத்தில் பாஜக மதக் கலவரத்தைத் தூண்டுகிறதா?

தமிழகத்தில் மட்டும்தான் அந்தக் குற்றச்சாட்டை வைக்கிறீர்களா?

இவ்வாறு கமல் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x