Published : 23 Oct 2015 08:48 AM
Last Updated : 23 Oct 2015 08:48 AM

கிலோ ரூ.110-க்கு விற்கும் திட்டம்: முழு துவரையை பருப்பாக மாற்றும் பணி தொடக்கம்

தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள 500 டன் முழு துவரையை உணவுத்துறை அரவை ஆலைகளில் பருப்பாக மாற்றும் பணி தொடங்கியது.

வட மாநிலங்களில் பருவமழை குறைந்ததால் துவரம்பருப்பு உற்பத்தி குறைந்தது. இதனால், பருப்பு விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிலோ ரூ.250-க்கு விற்கப்பட்டு வருகிறது. துவரம் பருப்பு விலையை கட்டுப்படுத்துவதற்காக, மத்திய அரசிடம் இருந்து 500 மெட்ரிக் டன் முழு துவரையை பெற்று அதை பருப்பாக்கி, கிலோ ரூ.110-க்கு விற்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் கூட்டுறவுத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பேசிய அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, முதல்வர் அறிவித்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, உணவுத் துறையின் சார்பில் துவரையை பருப்பாக்கும் பணிகள் தொடங்கி யுள்ளன.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சமீபத்தில் கப்பலில் சென்னை துறைமுகம் வந்திறங்கிய முழு துவரை, லாரிகள் மூலம் தமிழக உணவுத்துறைக்கு சொந்தமான அரவை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு அதை உடைத்து பருப்பாக மாற்றப்படும்.

பின்னர் ஒரு கிலோ, அரை கிலோ பாக்கெட்களில் அடைத்து கூட்டுறவுத்துறை அங்காடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இப்பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிந்து, நவம்பர் 1-ம் தேதி முதல் விற்பனைக்கு வந்துவிடும்.

காய்கறி விலையை குறைக்க தொடங்கப்பட்ட 58 பண்ணை பசுமை காய்கறி கடைகளில் கடந்த 18- ம் தேதி வரை 11 லட்சத்து 54 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.31 கோடியே 95 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x