Published : 02 Nov 2020 06:36 PM
Last Updated : 02 Nov 2020 06:36 PM

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் 

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்புப் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள மண்டலக் கண்காணிப்பு அலுவலர்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்புப் பணிகளுக்காக முதல்வர் பழனிசாமி ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு இந்திய ஆட்சிப் பணி நிலையில் உள்ள அலுவலர்களை மண்டலக் கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மழைநீரை அகற்ற மோட்டார்களுடன் கூடிய பம்பு செட்டுகள், நீர்நிலைகளைத் தூர்வார நவீன இயந்திரங்கள், பொது சமையலறைகள், நிவாரண மையங்கள், தேவையான இடங்களில் மீட்புப் பணிக்காக படகுகள், ஜெனரேட்டர்கள், மர அறுவை இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.

மேலும், தொடர்புடைய சேவைத் துறைகளான காவல்துறை, பொதுப்பணித்துறை, மின்துறை, ரயில்வே, மெட்ரோ ரயில், நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்புத் துறை ஆகியவற்றுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு பருவமழையை எதிர்கொள்ளத் தயார்நிலையில் உள்ளன.

கூவம், அடையாறு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 30 நீர்வரத்துக் கால்வாய்களின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டு அங்கு வசிக்கும் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மறு குடியமர்த்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்பொழுது வரை கரையோரங்களில் வசித்த 17,768 குடும்பங்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளன.

மீதமுள்ள குடும்பங்களை மறுகுடியமர்வு செய்யும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்களைத் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 90% அளவிற்கு பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைநீர் வடிகால்களைத் தூர்வார 7 நவீன ஜெட்ராடிங் இயந்திர வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 30 நீர்வரத்துக் கால்வாய்களில் ரோபோடிக் எக்ஸவேட்டர் மற்றும் அம்பிபியன் வாகனம் ஆகியவற்றைக் கொண்டு ஆகாயத்தாமரை மற்றும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள 16 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காவண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்விடங்களில் அதிக குதிரைத் திறன் கொண்ட 60 எண்ணிக்கையிலான பம்பு செட்டுகள் தயார் நிலையில் உள்ளன.

கடந்த காலங்களில் பருவமழையின்போது மண்டலக் கண்காணிப்பு அலுவலர்களால் வழங்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளின் அடிப்படையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, தாழ்வான பகுதியான திருவொற்றியூர் மண்டலம் கார்கில் நகரில் 1,046 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாதவரம் மண்டலம் அய்யன் திருவள்ளுவர் சாலையில் விடுபட்ட மழைநீர் வடிகால் இணைப்புப் பணிகள் அமைக்கப்பட்டுள்ளன. ராயபுரம் மண்டலம், வார்டு-53ல் உள்ள கண்ணன் ரவுண்டானா பகுதியில் 1,760 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடி கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அம்பத்தூர் மண்டலம்-அம்பத்தூர் ஏரியைச் சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகள் முழுவதும் பொதுப்பணித்துறையால் அகற்றப்பட்டுள்ளன. பருவமழையை முன்னிட்டு அந்தந்த மண்டலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மண்டலக் கண்காணிப்பு அலுவலர்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்தும் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஆணையர் இக்கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் இணை ஆணையாளர் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி, இணை ஆணையாளர் (கல்வி) சங்கர்லால் குமாவாத், வட்டாரத் துணை ஆணையாளர்கள் பி.ஆகாஷ், பி.என்.ஸ்ரீதர், டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ், 15 மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்ட இந்திய ஆட்சிப் பணி நிலை கண்காணிப்பு அலுவலர்கள், தலைமைப் பொறியாளர் (பொது) எல்.நந்தகுமார், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்''.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x