Published : 02 Nov 2020 03:24 PM
Last Updated : 02 Nov 2020 03:24 PM

சமூக நீதிக்கு விரோதமான ஆட்சியால் மருத்துவக் கல்வியில் இந்திய அளவில் 3,758; தமிழக அளவில் 764 இடங்கள் இழப்பு: கி.வீரமணி வேதனை

மத்திய பாஜக அரசின் சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளால் அகில இந்திய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் பிற்படுத்தப்பட்டோர் மருத்துவக் கல்வியில் இழக்கும் இடங்கள் மிக மிக அதிகம். இதற்கு ஒரே தீர்வு மக்கள் மன்றத்தில் வெடித்தெழும் போராட்டமே என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கை:

''சமூக நீதி என்பது காலங்காலமாய் நமது தலைவர்கள் போராடிப் பெற்ற உரிமைகள். கல்வி, உத்தியோகம் - இந்த இரண்டும்தான் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட எஸ்.சி/எஸ்.டி, ஓபிசி, போன்ற பல்வேறு தரப்பட்ட மக்களை அறிவுபூர்வமாக வளர்ச்சி அடையச் செய்யும் ஊட்டச்சத்து. பாதிக்கப்பட்ட மக்களுக்கான பரிகாரம்தான்.

இட ஒதுக்கீடு

பன்னூறு ஆண்டுகளாகப் பட்டினியில் கிடந்த பசியேப்ப சமுதாயத்தின் உரிமையை, ஆதிக்க உயர் சாதி பார்ப்பனர் தட்டிப் பறித்ததோடு, புளியேப்பமிட்டு புளகாங்கிதம் அடைவதில் பூரிப்புக் கொண்டிருந்தனர்.

அதை மாற்றிட, அந்தப் புண்ணை ஆற்றிடத்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகார சிகிச்சையாக இட ஒதுக்கீடு - சமூக நீதி - சட்டமாயிற்று, அரசுகளின் திட்டமாயிற்று. வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாழ்வும் ஓரளவு திருப்புமுனையைக் கண்டது.

கல்வியில் தொழிற்கல்வி முக்கியம் என்பதாலும், இருப்பது குறைவு - அதற்கேற்ப பரிமாறுதலும், பங்கீடும் அமையவேண்டும் என்பதற்கே நீதிக்கட்சி ஆட்சி என்று திராவிடர் ஆட்சியில் (தமிழ்நாட்டில்), அன்றைய சென்னை மாகாணத்தில் வகுப்புரிமை ஆணை பூத்தது. சம்ஸ்கிருதம் படித்திருந்தால்தான் மருத்துவக் கல்வி என்ற நிலையை மாற்றியது நீதிக்கட்சி ஆட்சி. அன்று பானகல் அரசர் பிரதம அமைச்சராக இருந்த காலத்தில், சம்ஸ்கிருதம் படித்தவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு மனு போட்டு, மருத்துவக் கல்லூரிக்குள் நுழையும் தகுதியைப் பெற முடியும் என்றாக்கப்பட்ட நிலை மாற்றப்பட்டது.

தொடர்ந்த காமராசர் ஆட்சி, அண்ணா, கலைஞர் மற்றும் திராவிடர் ஆட்சிகளால் மருத்துவர்களாக ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள் இடம்பெற்று பல்லாண்டு கால சமூக அநீதிக்கு ஓரளவு பரிகாரம் காணப்பட்டது.

‘நீட்’ என்னும் கண்ணிவெடி

இந்த ‘நீட்’ தேர்வு என்ற பார்ப்பன கண்ணி வெடியை - ஆர்எஸ்எஸ், பாஜக ஆட்சிப் பிரதமர் மோடி தலைமையில் வைத்து, கடந்த 4 ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வு மூலம் பிற்படுத்தப்பட்டோர் உரிமை முற்றாகப் பறிக்கப்பட்டு, பார்ப்பனப் பகற்கொள்ளை பட்டாங்கமாய் நடைபெற்று வருகிறது.

அரசியலமைப்புச் சட்டம், உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் இவை எவற்றையுமே மத்திய பாஜக அரசு பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. பகிரங்கமாகவே புறந்தள்ளப்படுகிறது. சட்டமும், தீர்ப்புகளும்கூட எப்படியெல்லாம் புறக்கணிக்கப்பட முடியுமோ, அப்படி நடைபெறுகிறது.

பிற்படுத்தப்பட்டோரின் பெரும் இழப்புகள்

மாநில உரிமைகளோ பறிமுதல் செய்யப்படுகின்றன. தமிழ்நாடு மாநில அரசோ, உரிமையை வலியுறுத்துவதற்குப் பதில் ‘பிச்சாந்தேகி’ என்று டெல்லியிடம் மடிப் பிச்சை ஏந்துவதால் ஏற்படும், விளைவு வெறும் பூஜ்ஜியம்தான்.

நெஞ்சு பதைபதைக்கும் ஒரு தகவல் - இவ்வாண்டு அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோர் இழந்துள்ள இடங்கள் மருத்துவப் படிப்பில் எவ்வளவு தெரியுமா? (27 சதவிகித அளவில் கணக்கிட்ட நிலையில்) 3,758 - தமிழ்நாட்டில் இழக்கப்பட்டது 764 மருத்துவ இடங்கள். (50 சதவிகித இட ஒதுக்கீடு சட்டப்படி) அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலக் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தைக் காண்க.

சமூக நீதியில் நம்பிக்கை உள்ள அரசியல் கட்சிகள், சமூகநல அமைப்புகள் இதைப் பார்த்த பிறகும் வாளா இருக்க முடிகிறதா? நீதி கேட்டுப் போராட முன்வரவேண்டாமா? பேச வேண்டிய நேரத்தில் மவுனம் காப்பதும், அநீதியைக் கண்டிக்கவேண்டிய நேரத்தில் அமைதி காத்து, யாருக்கோ வந்த விருந்து என்று வாய்மூடி கைகட்டி வேடிக்கைப் பார்ப்பதும் விரும்பத்தக்கதா?

மக்கள் போராட்டமே இறுதித் தீர்வு

மக்கள் மன்றத்தின் போராட்டம் இறுதியில் என்றுமே தோற்றதாக வரலாறு இல்லை. மக்கள் சக்தி மகத்தான சக்தி. அதன் வலிமை மீது நாம் நம்பிக்கையை ஒருபோதும் இழக்கக் கூடாது. விழிப்புற்று எழுக. தூங்கிக் கொண்டே இருந்தால், தொடையில் கயிறு திரிப்பவன் திரித்துக் கொண்டேதான் இருப்பான் என்ற அனுபவப் பழமொழியை நினைவு கூர்ந்து, களம் காண திரண்டு வாருங்கள். அநீதி தொடர்கதையாகக் கூடாது''.

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x