Last Updated : 02 Nov, 2020 04:54 PM

 

Published : 02 Nov 2020 04:54 PM
Last Updated : 02 Nov 2020 04:54 PM

பாரிஜாத மலர் சாகுபடி குறித்து காரைக்கால் வேளாண் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி

காரைக்கால் மாவட்டம், பேட்டை கிராமத்தில் பாரிஜாத மலர் சாகுபடி குறித்த களப்பயிற்சியில் பங்கேற்ற காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள்.

காரைக்கால்

பாரிஜாத மலர் சாகுபடி குறித்து காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவ, மாணவிகளுக்கு இன்று (நவ.2) பயிற்சி அளிக்கப்பட்டது.

இக்கல்லூரியில் நான்காம் ஆண்டு இளங்கலை வேளாண் பட்டப்படிப்பு பயின்று வரும் 121 மாணவர்கள் புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று தங்கிக் களப்பயிற்சி மற்றும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். காரைக்காலில் 20 மாணவிகளும், 3 மாணவர்களும், கல்லூரி இணைப் பேராசிரியர் டாக்டர் எஸ்.ஆனந்த்குமார் வழிகாட்டுதலில் இப்பயிற்சியைப் பெற்று வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் மாவட்டத்தில் யாருமே இதுவரை சாகுபடி செய்யாத பாரிஜாத மலர் சாகுபடி குறித்து பேட்டை கிராமத்தில் மேற்கொண்டு வரும் விவசாயி ராஜேந்திரன் என்பவரது வயலில் மாணவ, மாணவிகள் களப் பயிற்சி பெற்றனர். சாகுபடி செய்யும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விவசாயி ராஜேந்திரன் விளக்கம் அளித்தார்.

இதுகுறித்துப் பேராசிரியர் எஸ்.ஆனந்த்குமார் மாணவர்களிடம் கூறும்போது, ''கடந்த 2017-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் ஷிமோகா என்ற இடத்திலிருந்து 30 பாரிஜாதக் கன்றுகளை இந்த விவசாயி வாங்கி வந்துள்ளார். அவற்றைச் சாகுபடி செய்வதற்கு ஏற்ற தட்பவெப்ப, சீதோஷ்ண நிலை காரைக்காலில் இல்லை. அதனால் அனுகூலமான வெப்பத்தையும், ஈரப்பதத்தையும் உருவாக்க உரிய சாதனங்களைப் பொருத்திப் பராமரித்து வந்தார். அதன் காரணமாக, மூன்று மாதங்களுக்குப் பின்னர் மலர்கள் மலரத் தொடங்கி விட்டன.

அதன் பின்னர் நிழல் வலை மற்றும் தட்பவெப்ப மேலாண்மைச் சாதனங்களின் தேவை இல்லாமல் போனது. தற்போது நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் மலர்கள் விவசாயி ராஜேந்திரனின் வயலில் பூத்துக் குலுங்குகின்றன. இதுபோன்ற புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் விவசாயிகளைக் கண்டறிந்து பாராட்டி, ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் வங்கிக் கடன் வசதிகளைப் பெற அரசு உதவ வேண்டும்'' என்றார். மேலும் மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்.

மாணவர் சஞ்சய் காந்த் பாரிஜாத மலர் சாகுபடி குறித்து, தான் அறிந்துகொண்ட தகவல்களை மற்ற மாணவர்களோடு பகிர்ந்து கொண்டார். முன்னாள் மாணவி தனலட்சுமி நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x