Published : 30 Oct 2020 11:20 AM
Last Updated : 30 Oct 2020 11:20 AM

7.5% உள் இட ஒதுக்கீடு அரசாணை; கி.வீரமணி, இரா.முத்தரசன், ஜி.கே.வாசன் வரவேற்பு

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று (அக். 29) பிறப்பித்துள்ளது. இது தொடர்பான சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ள நிலையில், அவசரநிலை கருதி தமிழக அரசு தனக்கான நிர்வாக அதிகாரத்தின்கீழ் கொள்கை முடிவெடுத்து இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டில், அனைத்துப் பிரிவிலும் இந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இந்த 2020-21 ஆம் கல்வியாண்டு முதல் பின்பற்றப்படும் என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பிய, தமிழ்நாட்டு மருத்துவக் கல்வி இடங்களில் 7.5 சதவீதம் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் என்ற உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் சுமார் இரண்டு மாதங்களாக இழுத்தடிப்பதோடு, மேலும் சில வாரங்கள் ஆகலாம் என்று இவ்வாண்டு கலந்தாய்வு தொடங்கவேண்டிய காலகட்டத்திலும் ஆளுநர் கூறியிருந்தார்.

கி.வீரமணி: கோப்புப்படம்

இந்நிலையில், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும், தலைவர்களும் வலியுறுத்தியும், அதற்கு மதிப்பளிக்கத் தவறிய நிலையில், தமிழ்நாடு அரசு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 162 ஆவது பிரிவினைப் பயன்படுத்தி, தனது செயற்பாட்டினை ஒரு அரசு ஆணையாகவே போட்டு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

மருத்துவ மாணவர்கள் தேர்வு மூலம் ஒரு கதவு திறக்கப்படுகிறது. தமிழக அரசின் கொள்கை முடிவாகவும் அமைவதால், இது தற்போதைய சூழ்நிலையில் உள்ள ஒரே வழி. தமிழக அரசின் இந்த ஆணை முடிவை வரவேற்கிறோம். மாநில அரசின் இந்த உரிமை உணர்வு தொடரட்டும்.

இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்திய நீட் தேர்வு முறையால் தமிழகத்திற்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மருத்துவக் கல்வி பெறும் கனவுகளோடு இருந்த அரியலூர் அனிதா தொடங்கி 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிர் பலியானார்கள். இந்தப் பதற்ற நிலை இன்னும் தொடர்கிறது.

இரா.முத்தரசன்: கோப்புப்படம்

மருத்துவக் கல்லூரிகள் அதிகம் உள்ள தமிழ்நாட்டில், மாணவர்கள் மருத்துவக் கல்வி பெறும் வாய்ப்பைப் பாதுகாக்க வேண்டும் எனப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இந்தச் சூழலில் அரசுப் பள்ளியில் மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்போருக்கு, இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்ட முன் வடிவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது.

அரசியலமைப்பு அதிகாரத்தின் படி, மாநில அமைச்சரவையின் ஆலோசனைகளை ஏற்க வேண்டிய கடமைப் பொறுப்பை ஆளுநர் அலட்சியம் செய்து, இன்னும் மூன்று, நான்கு வார கால அவகாசம் தேவை என கூறியிருந்தார்.

இந்த நிலையில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அராசணை வெளியிட்டிருப்பதும், நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசாணைப்படி 7.5 சதவீத இடங்களை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்க வேண்டும் என அரசாணை தெளிவுபடுத்தியுள்ளது.

ஆளுநர் ஒப்புதல் குறித்த சர்ச்சைக்கு மத்தியில் 7.5% இட ஒதுக்கீட்டுக்கான அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு பாராட்டி வரவேற்கிறது. இதேபோல், மாநில அரசின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதி காட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது.

ஜி.கே.வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு என்பது கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவே. இதனை தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதாவாக நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி 45 நாட்கள் ஆகின்றன. ஆனால், இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இன்னும் மூன்று, நான்கு வாரங்கள் அவகாசம் கேட்கிறார்.

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

இத்தகைய சூழலில் இதனுடைய முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தமிழக அரசு நேற்று மாலை அரசாணை வெளியிட்டு இருக்கிறது. பெற்றோர்கள், மாணவர்கள் குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுடைய எண்ணங்களையும் எதிர்பார்ப்பையும் கருத்தில் கொண்டு இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக ஆளுநர் இந்த முக்கிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமாகா வலியுறுத்துகிறது.

இவ்வாறு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x