Last Updated : 29 Oct, 2020 10:29 PM

 

Published : 29 Oct 2020 10:29 PM
Last Updated : 29 Oct 2020 10:29 PM

பசும்பொன்னில் 8,000 போலீஸார் பாதுகாப்பு: அஞ்சலி செலுத்த அரசியல் கட்சியினருக்கு நேரம் ஒதுக்கீடு

தமிழக முதல்வர் பழனிச்சாமி நாளை (அக்.30) நடைபெறும் பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்று மரியாதை செலுத்துகிறார். மேலும் அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினருக்கு அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58-வது குருபூஜை விழா நாளை நடைபெறுகிறது. நாளை அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. அரசு சார்பில் காலை 9 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர்.

மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாஜக மாநில தலைவர் எல்.முருகன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக நிர்வாகி எல்.கே.சுதீஷ்,முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் தலைவர் கருணாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பின் தலைவர்கள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினருக்கு தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு செய்துள்ளது. ஒதுக்கப்பட்ட நேரத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியினருக்கு நேரம் ஒதுக்கீடு:

காலை 9 மணிக்கு அரசு சார்பில் அஞ்சலி, பாஜக காலை 9.45 முதல் 10 மணி, பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அறக்கட்டளை காலை 10.00-10.15, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காலை 10.15-10.30, திமுக 10.30-10.45, மதிமுக 10.45-11.00, முக்குலத்தோர் புலிப்படை 11.00-11.15, அமமுக 11.15-11.30, இந்திய தேசிய காங்கிரஸ் 11.30-11.45, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் 11.45-12.00, நாம் தமிழர் கட்சி பிற்பகள் 12.00-12.15, தமாகா 12.15-12.30, தேமுதிக 12.30-12.45, பசும்பொன் மக்கள் கழகம் பிற்பகல் 1.00-1.15, மூவேந்தர் முன்னேற்றக்கழகம் 1.15- 1.30, அகில இந்திய பார்வர்ட் பிளாக்(தமிழ் மாநிலக்குழு), 1.30- 1.45, அகில இந்திய பார்வர்ட் பிளாக்(சுபாஷிஸ்ட்) 2.15- 2.30, தென்னாட்டு மக்கள் கட்சி 2.45- 3.00, அகில இந்திய பார்வர்ட் பிளாக்(வல்லரசு) 4.15- 4.30, அகில இந்திய வல்லரசு பார்வர்ட் பிளாக் 4.30- 4.45 மணி என நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பசும்பொன்னில் 8,000 போலீஸார் பாதுகாப்பு

தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 8,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 9 வெடிகுண்டு துப்பறியும் குழுவினர், 9 துப்பறியும் நாய் படை குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பசும்பொன் மற்றும் கமுதியில் 200 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் 151 பகுதிகள் தடை செய்யப்பட்ட வழித்தடங்களாகவும்,131 இடங்கள் பதட்டமான பகுதிகளாகவும் கண்டறியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கண்காணிப்பைப் பலப்படுத்த ஆளில்லாத விமானங்கள் பறக்கவிடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அதற்கான ஒத்திகை நேற்று பசும்பொன் காவல் கட்டுப்பாட்டு அறை அருகே வேலூர் டிஐஜி காமினி மற்றும் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் முன்னிலையில் நடத்தப்பட்டது.

அப்போது காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பசும்பொன்னில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமையில் தென்மண்டல ஐஜி முருகன், வடக்கு மண்டல ஐஜி பொன்.நாகராஜன், டிஐஜிக்கள் காமினி(வேலூர்), என்.எம்.மயில்வாகனன்(ராமநாதபுரம்) மற்றும் 13 எஸ்பிக்கள், 22 ஏடிஎஸ்பிகள், 80 டிஎஸ்பிக்கள் மற்றும் என 8,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆளில்லா விமானம் மூலமும் கண்காணிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட சமுதாய தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x