Published : 23 Oct 2020 12:31 PM
Last Updated : 23 Oct 2020 12:31 PM

மருத்துவப் படிப்பு; 7.5% இடஒதுக்கீடு விவகாரம்: ஆளுநர் ஒப்புதல் வழங்க தாமதித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்: கே.எஸ்.அழகிரி

7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (அக். 23) வெளியிட்ட அறிக்கை:

"அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து கடந்த 15.9.2020 அன்று ஏகமனதாக நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பிய மசோதாவுக்கு இன்று வரை ஒப்புதல் அளிக்க அவர் முன்வரவில்லை. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு மேலும் 3 முதல் 4 வாரங்கள் அவகாசம் தேவைப்படும் என்று ஆளுநர் கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண்ணை ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்லுரிகளில் சேர வாய்ப்பு கிடைக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், 7.5 சதவீத மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினால் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க காலம் தாழ்த்துவது தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்வி குறியாக்கிவிடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பின்னரே தமிழகத்தில் கலந்தாய்வு நடக்கும் என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்கவேண்டும் என்று கோருவதற்காக ஆளுநரைச் சந்தித்து தமிழக அமைச்சர்கள் வலியுத்தியுள்ளனர். திமுகழகவும் ஆளுநரைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறது. ஆனால், ஆளுநர் எதற்கும் அசைந்து கொடுக்க தயாராக இல்லை.

அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநரின் அதிகாரம் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் அறிவுரைப்படி ஆளுநர் பணியாற்ற வேண்டும். அமைச்சர்கள் குழு எடுக்கும் முடிவுகளையும் சட்டம் இயற்றப்படுவதற்கான மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருக்கிறது. நடைமுறையில் அமைச்சர்கள் குழுதான் மாநில நிர்வாகத்தை நடத்துகிறது. ஆளுநர் பெயரில் செய்யப்பட்டாலும் அதிகாரத்தை உண்மையில் செலுத்துவது அமைச்சர்கள் குழுதான்.

அமைச்சர்கள் குழுவின் அறிவுரைக்கு எதிராக ஆளுநர் செயல்பட முடியாது. ஆளுநருக்குள்ள விருப்பு உரிமையின் அளவு மிக மிகக் குறைவாகும். அரசின் கொள்கையை வகுப்பதும், நடைமுறையில் செயல்வடிவம் கொடுப்பதும் அமைச்சரவை குழுதான்.

எனவே, அரசியலமைப்பு சட்டத்தின் படி தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்குக் கால தாமதமின்றி ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். இந்த மசோதாவைப் பொறுத்தவரை கடந்த 40 நாட்களாக எந்த முடிவும் எடுக்காமல் முடக்கி வைத்திருக்கும் ஆளுநரைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை.

மத்திய பாஜக அரசின் ஏஜெண்டாக பல மாநிலங்களில் ஆளுநர்கள் செயல்பட்டு வருகிறார்கள். கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கோவா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர்கள் பாஜகவோடு இணைந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஆட்சியைக் கவிழ்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த முயற்சியில் கர்நாடகா, மத்திய பிரதேசம், கோவாவில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அதே போல மகாராஷ்டிரம், மேற்கு வங்க ஆளுநர்கள் மாநில நிர்வாகத்தை சீர்குலைப்பதற்கு அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதே அணுகுமுறையை பின்பற்றி தமிழக ஆளுநரும் மத்திய பாஜக அரசின் ஏஜெண்டாகவே செயல்படுகிறார்.

பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்தினால்தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவேன் என்று தமிழக ஆளுநர் கூறியிருப்பதாக செய்திகள் வெளிவந்து இருக்கின்றன. இது சமூக நீதியைக் குழி தோண்டி புதைக்கிற செயலாகும்.

எனவே, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிற வகையில் தமிழக சட்டப்பேரவையில் மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்குத் தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். அப்படி வழங்குவதில் காலதாமத்தை ஏற்படுத்துவாரேயானால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன். இதில் ஆளுநரைத் தட்டிக்கேட்க துணிவில்லாமல் செயல்படும் அதிமுக அரசையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x